தமிழ் சினிமாவில் ரசிகர்களால் மறக்க முடியாத ஒரு நடிகர் தான் நந்தா. சூர்யாவின் மௌனம் பேசியதே திரைப்படத்திலிருந்து நாம் நந்தாவை பார்த்து வருகிறோம். தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே சூர்யா உடன் சிறந்த கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். அந்தத் திரைப்படத்தில் அவர் நடித்த கண்ணன் கதாபாத்திரத்திற்கு தற்போது வரை ரசிகர்கள் கூட்டம் உள்ளது. நந்தா படத்திற்கு பிறகு பல படங்களில் தொடர்ந்து கதாநாயகனாக நடித்து வந்தார். இவர் நாயகனாக நடித்த சில திரைப்படங்கள் மக்களை கவர்ந்தது அதில் ஒரு சில திரைப்படங்கள் தோல்வியை சந்தித்தது. அதன் பிறகு நந்தா மக்களால் வெகுவாக கவனிக்கப்பட்ட படம் என்றால் ஈரம் திரைப்படத்தை சொல்லலாம்.

இது திரைப்படத்தில் முதல்முறையாக யாரும் எதிர்பாராத அளவில் வில்லனாக நடித்து அசத்தியிருந்தார். அந்தப் படத்தில் வில்லனாக நடித்து அசத்தியதால் பல விருதுகளையும் அந்த சமயத்தில் நந்தா பெற்றார். பிறகு மணிரத்தினம் தயாரிப்பில் தனசேகரன் இயக்கிய வெளிவந்த வானம் கொட்டட்டும் என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய வில்லத்தனமான கதாபாத்திரத்தில் நந்தா நடித்திருந்தார். பாஸ்கர் என்ற கதாபாத்திரத்தை யாரும் எதிர்பாராத அளவில் சிறப்பாக நடித்திருந்தார்.

இந்நிலையில் நடிகர் நந்தா சமீபத்தில் அளித்த பேட்டியில் தான் சினிமாவில் முதல் முறையாக நுழைந்த அனுபவம் குறித்து பேசி உள்ளார். அதில், நான் இன்னைக்கு இந்த இடத்துல இருக்க முக்கிய காரணமே தாணு சார் தான். நான் சினிமாவில் நடிக்கணும் என்று வாய்ப்பு தேடிக் கொண்டிருந்த சமயத்தில் ஒரு நாள் தாணு சார் என்னை சந்தித்தார். அப்போ அவர்கிட்ட நான் பேசுனதும் என்ன பார்த்துட்டு நீ சினிமாவுல நடிச்சா நல்லா இருக்கும் என்று சொன்னாரு. அவர் அப்படி சொன்னதும் எனக்கு ரொம்ப சந்தோஷம். உடனே நான் எடுத்து வைத்திருந்த சில போட்டோஸ் அவர்கிட்ட காட்டுன. பார்த்ததும் நீ ஃபிலிம் இன்ஸ்டியூட் போய் எல்லாத்தையும் கத்துகிட்டு வா வேற எந்த டைரக்டர் கிட்டயும் தேடி போகாத வெயிட் பண்ணு நானே உன்னை சினிமாவுக்கு கொண்டு வரேன் என்று சொன்னார்.

அவர் சொன்ன மாதிரி நானும் போய் ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் நான்கு வருடம் படித்து முடித்துவிட்டு வெளியே வந்தேன். அதன்பிறகு என்னுடைய முதல் படம் ரத்தினகுமார் சாருடன் தாணு தயாரிப்பில் அமைந்தது. படப்பிடிப்பு எல்லாம் நடந்து கொண்டிருக்கும்போது நான் முதல்முறையாக நடிக்கக்கூடிய படம் என்பதால் என்னால் தனிப்பட்ட எந்த கருத்துக்களையும் சொல்ல முடியவில்லை. நான் சில கருத்துக்களை சொல்லும்போது கூட ரத்தினகுமார் சார் கேட்கவே இல்லை. ஒரு கட்டத்துல என்னால இந்த படத்துல பண்ண முடியாது என்று தோணும் அளவுக்கு வந்து விட்டது.

நான் நேரடியா தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு சார்கிட்ட போய் வெளிப்படையா நடந்த எல்லாத்தையும் சொல்லி என்னால இந்த படத்துல பண்ண முடியாதுன்னு சொல்லிட்டேன். உனக்காக தான் இந்த படமே பண்றேன் உனக்கு பிடிக்கலைன்னா வேண்டாம் என்று சொல்லி உடனே அந்த படத்தை நிறுத்திட்டாரு. எந்த ஒரு தயாரிப்பாளருமே அப்படி பண்ண மாட்டாங்க. அது மட்டுமல்லாமல் சுமார் 20 நாட்களுக்கு மேல் படத்தின் ஷூட்டிங் நடந்ததற்கு 90 லட்சம் ரூபாய் வரை அவர் செலவு செய்திருந்தார். அது அவருக்கு ஒரு பெரிய விஷயமாகவே தெரியல. முதல் படமே பாதியில் நின்று விட்டது என்று சொன்னால் உனக்கு தான் சினிமாவில் பெரிய பாதிப்பு இருக்கும் நீ ஒன்னும் வருத்தப்படாத உடனே அடுத்த படத்தை பண்ணலாம் என்று சொன்னாரு. அதன் பிறகு உருவான திரைப்படம் தான் புன்னகை பூவே என்று தனக்காக தாணு செய்த செயலை நந்தா பகிர்ந்து உள்ளார்.
