தமிழ் திரையுலகில் காலத்தால் அழிக்க முடியாத நினைவுகளை பதித்து சென்ற நடிகர்களில் ஒருவர்தான் நாகேஷ். கதாநாயகன், நகைச்சுவை நடிகர், வில்லன் மற்றும் குணச்சித்திர வேடம் என அனைத்திலும் சிறந்து விளங்கினார். நாகேஷுக்கு முந்தைய நகைச்சுவை நடிகர்களான என் எஸ் கிருஷ்ணன் மற்றும் தங்கவேலு போன்றோர் கருத்துக்களுடன் நகைச்சுவை கூறி வந்த நிலையில் முதன்முதலாக பாடி லாங்குவேஜ் மூலம் நகைச்சுவையை அள்ளித் தெளித்தவர்தான் நாகேஷ். இவர் நடித்த திருவிளையாடல் தருமி, தில்லானா மோகனாம்பாள் வாத்தி, காதலிக்க நேரமில்லை செல்லப்பா போன்ற பல கேரக்டர்களை பல தலைமுறைகள் ஞாபகம் வைத்திருக்கும் திரைப்படங்களாக அமைந்தது.
அதேசமயம் முன்னணி நாயகர்களாக எம்ஜிஆர் – சிவாஜி, கமல் – ரஜினி, அஜித் – விஜய் ஆகிய மூன்று தலைமுறை நடிகர்களுடன் ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்து அசத்தியுள்ளார். கமல் நடித்த அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்தில் வில்லன், அவ்வை சண்முகி படத்தில் மேக்கப் மேன் போன்ற வேடங்களிலும் ரஜினி நடித்த தில்லுமுல்லு, அதிசய பிறவி ஆகிய படங்களிலும் இணைந்து நடித்துள்ளார். அதனைப் போலவே விஜய் உடன் பூவே உனக்காக மற்றும் அஜித்துடன் பூவெல்லாம் உன் வாசம் ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
நாகேஷின் நடிப்பை முழுக்க முழுக்க வெளிப்படுத்த காரணமாக இருந்தவர் அவருடைய நண்பரும் இயக்குனர் சிகரமுமான கே பாலசந்தர்தான். எதிர்நீச்சல், நீர்க்குமிழி, இரு கோடுகள் மற்றும் தாமரை நெஞ்சம் போன்ற பல படங்கள் காலத்தால் அழியாதது. இப்படி சினிமாவில் நடிப்பு மற்றும் நடனத்தில் கலக்கிய நாகேஷ் ஒரு திரைப்படத்தை இயக்கவும் செய்தார். அதாவது அவருடைய மகன் நானும் பாபு முக்கிய வேடத்தில் நடித்த பார்த்த ஞாபகம் இல்லையோ என்ற திரைப்படம் நாகேஷ் இயக்கிய ஒரே திரைப்படம் ஆகும்.
இந்த படத்தில் ஆனந்த்பாபு உடன் ரம்யா கிருஷ்ணன், ராதாரவி, தேங்காய் சீனிவாசன், ஆர் எஸ் மனோகர் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த படத்தில் இரட்டை சகோதரிகள் சிறுவயதிலேயே பிரிந்து விடும் நிலையில் அதில் ஒருவர் பணக்கார வீட்டிலும் ஒருவர் ஏழை வீட்டிலும் வளர்கின்றனர். இருவரையும் வைத்து ஆள் மாறாட்ட கதையாக உருவான திரைப்படம் தான் இது.