தமிழ் சினிமாவில் ரசிகர்கள் அனைவராலும் கொண்டாடப்படக்கூடிய நடிகர்கள் வெகு சிலர் மட்டுமே. மேடை நாடகங்கள் தொடங்கி நடிப்பு, இயக்குனர், தயாரிப்பாளர் என பல திறமைகளுடன் வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர்கள் சிலர் மட்டுமே உள்ளனர். அந்த வரிசையில் இடம் பிடித்தவர் தான் நடிகர் மௌலி. திருவிடைமருதூர் சாம்ப மூர்த்தி கணபதி பாலகிருஷ்ண சாஸ்திரிகள் என்பதுதான் மௌலியின் முழு பெயர். சினிமாவுக்காக தன்னுடைய பெயரை மௌலி என மாற்றிக் கொண்டார்.

இயக்குனர், நடிகர், திரைக்கதை ஆசிரியர் என பன்முகம் கொண்ட இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் படங்களை இயக்கியும் நடித்துமுள்ளார். கமல்ஹாசன் மற்றும் சிம்ரன் நடிப்பில் வெளியாகி செம்ம ஹிட்டான பம்மல் கே சம்பந்தம் திரைப்படமும் மாதவன் நடித்த நள தமயந்தி என்ற திரைப்படமும் இவர் இயக்கிய வெற்றி திரைப்படங்களில் சிலவாகும். இவர் இறுதியாக maara என்ற வெப் தொடரில் நடித்து முடித்துள்ளார்.

திரையரங்கில் அவரது நடிப்பில் வெளியான படம் என்றால் அது நயன்தாரா நடிப்பில் வெளியான மூக்குத்தி அம்மன் திரைப்படம் தான். இந்தத் திரைப்படத்தில் தான் இவர் இறுதியாக நடித்திருந்தார். நடிகர் என்பதைத் தாண்டி நான்காயிரம் மேடை நாடகங்களில் நடித்துள்ளார். அது மட்டுமல்லாமல் சிறந்த எழுத்தாளர் என்பதற்காக கலைமாமணி விருதும் 5 நந்தி விருதுகளையும் பெற்றுள்ளார். 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள மௌலி பல சீரியல்களிலும் நடித்துள்ளார்.

அதன்படி மௌலி 1997 ஆம் ஆண்டு நிம்மதி உங்கள் சாய்ஸ், 2008 ஆம் ஆண்டு கோலங்கள், கலசம், 2010 ஆம் ஆண்டு நாதஸ்வரம், 2015 ஆம் ஆண்டு குலதெய்வம், 2018 ஆம் ஆண்டு கல்யாண வீடு போன்ற சன் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். 2020 ஆம் ஆண்டு அன்பே வா என்ற தொடரிலும் இவர் நடிக்க தொடங்கினார். திருமணம் செய்த மௌலி அவர்களுக்கு ஒரு மகளும் உள்ளார். இவருடைய மகள் ஷ்ரவந்தி ஒரு கர்நாடக பாடகி ஆவார். மௌலியின் சகோதரரும் சினிமாவில் தான் உள்ளார்.

சுமார் 35 திரைப்படங்களுக்கு மேல் தமிழ் மற்றும் தெலுங்கு என இயக்கியுள்ள மௌலி நன்றி, மீண்டும் வருக மற்றும் ஒரு வாரிசு உருவாகிறது என்ற படங்களில் நடித்த பிரதாப் போத்தனிற்காக டப்பிங் பேசியுள்ளார். இப்படி சினிமாவில் எண்ணற்ற சாதனைகளை செய்த மௌலி தற்போது வயது முதிர்வு காரணமாக சினிமாவில் நடிப்பதை குறைத்துக் கொண்டார்.
