பிரபல நடிகரும், இயக்குனருமான மாரிமுத்து கடந்த 8-ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். இவர் எதிர்நீச்சல் சீரியலின் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமானவர். அதுவும் மாரிமுத்து பேசும் “ஏம்மா ஏய்” என்ற வார்த்தைக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. மாரிமுத்துவின் இறப்பிற்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் மாரிமுத்துவின் மனைவி பாக்கியலட்சுமி அளித்த பேட்டியில், எனது கணவர் இறந்த இரண்டு நாட்களுக்கு பிறகு வாய் பேச முடியாத ஒருவர் எங்கள் வீட்டிற்கு வந்தார்.

அவர் பசுமலைதேரி, தேனி என்று எழுதப்பட்ட ஒரு துண்டு சீட்டை மட்டும் தான் கையில் வைத்திருந்தார். ஒரு மில்லில் வேலை பார்க்கும் அவர் எனது கணவர் இறந்த செய்தியை கேள்விப்பட்டு ஒரு பேப்பரை மட்டும் கையில் வைத்துக் கொண்டு எங்களை பார்க்க வந்ததை நினைக்கும் போது நெகிழ்ச்சியாக இருந்தது. அவருக்கு சாப்பாடு பணம் கொடுத்து எங்களுக்கு தெரிந்த ஒருவரோடு ஊருக்கு அனுப்பி வைத்தோம்.

யார் என்று தெரியாத ஒருவர் எனது கணவருக்காக எங்களை தேடி வந்தது தான் அவர் எங்களுக்கு சேர்த்து வைத்த பெருமை. எனது கணவருக்கு குடும்பம் தான் எல்லாமே. நான் ஒரு சில நேரம் கஷ்டப்பட்டு சோர்ந்து உட்கார்ந்து இருந்தாலும் கஷ்டம், பணம் இன்னைக்கு வரும் நாளைக்கு போகும் அதை எல்லாம் நினைச்சு கவலைப்படாதே என கூறுவார். எனது கணவருக்கு பாசம் காட்ட தெரியாது. நானும் எனது இரண்டு பிள்ளைகளும் தான் அவருக்கு எல்லாமே. அதிலும் எனது மகள் மீது ரொம்ப பாசமா இருப்பார்.

இப்போது எங்களை விட அவள் தைரியமாக இருப்பதை நினைக்கும் போது சற்று ஆறுதலாக இருக்கிறது. கடைசியாக எனது கணவர் பிறந்த நாளை முன்னிட்டு எதிர்நீச்சல் சீரியல் செட்டுக்கு சென்றோம். அப்போது அங்கிருந்தவர்கள் எப்போதும் சார் குடும்பத்தை பற்றி தான் பேசிக் கொண்டே இருப்பார் என கூறினார்கள். எனது கணவர் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என ஆசைப்பட்டாரோ அதனை என் பிள்ளைகள் மூலமாக நான் கண்டிப்பாக செய்வேன். எனது மகன் என்னையும், எனது மகளையும் கண்டிப்பாக நல்ல பார்த்துக் கொள்வான் என உருக்கமாக பேசியுள்ளார்.
