தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகர்களில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஒருவர்தான் லொள்ளு சபா மனோகர். விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் இவர் தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமானார். பல திரைப்படங்கள் மற்றும் தொடர்களில் நடித்திருந்தாலும் பெரிய அளவு வருவாய் இல்லாமல் சிரமப்பட்டு வருவதாக இவர் பலமுறை பேட்டிகளில் கூறியுள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் தென்னிந்திய நடிகர் சங்க பொது குழு கூட்டம் நடைபெற்ற நிலையில் அதற்கு வந்திருந்த மனோகர் நிபுணர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, நலிந்த கலைஞர்கள் பட்டியலில் என்னை சேர்க்க வேண்டும்.
தயாரிப்பாளர் ரிஷி ராஜ் எனக்கு 10 லட்சம் ரூபாய் தர வேண்டும். இதற்காக நடிகர் சங்கத்திடம் புகார் அளித்தும் எந்த பயனும் இல்லை. நீதிமன்றத்திலும் நான்கு வருடம் வழக்கு நடைபெற்று வருகின்றது. எனக்கு நியாயம் கிடைக்கவில்லை என்று கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து சமீபத்தில் பிரபல youtube சேனல் ஒன்றுக்கு லொள்ளு சபா மனோகர் தனது மனைவி மற்றும் மகளுடன் பேட்டியளித்தார். அதில், ரிஷி ராஜ் நான் ஒரு புது படம் எடுக்கலாம்னு இருக்கேன் எனக்கு கொஞ்சம் பணம் தேவைப்படுது என்று என்னிடம் கேட்டார். நானும் மூன்று தவணைகளாக அவரிடம் 10 லட்சம் ரூபாய் பணத்தை நம்பி கொடுத்தேன். ஆனால் அதன் பிறகு அவர் என்னிடம் பணத்தை தராமல் ஏமாற்றி விட்டார்.
இது குறித்து நடிகர் சங்கத்திலும் நான் புகார் அளித்துள்ளேன். நீதிமன்றத்திலும் நான்கு வருடங்களாக வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. என் மனைவியுடன் அந்த அளவிற்கு நான் நெருக்கமாக இல்லாததால் எல்லாம் முடிவையும் அவரிடம் ஆலோசிக்காமல் நானே எடுத்துக் கொள்வேன். அப்படித்தான் இந்த பணத்தையும் கொடுத்து விட்டேன். எனக்கு பணம் இருந்தால் மட்டும் போதும் அதை வைத்து அதை வாங்க வேண்டும் இப்படி செலவு செய்ய வேண்டும் என்ற எண்ணம் அப்போது தோன்றவில்லை. இந்த பத்து லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்து சுமார் பத்து வருடங்கள் ஆகிறது. இப்போது ரிஷி ராஜ் எங்கே இருக்கிறார் என்பது கூட தெரியவில்லை. என்னுடைய மகன் மகளுக்கு கூட திருமணம் செய்ய தற்போது பணம் இல்லாமல் மிகவும் சிரமப்படுகிறேன் என கண்ணீர் மல்க பேட்டி அளித்தார்.