நவரச நாயகன் கார்த்திக்கின் திரையுலக வாழ்க்கை குறித்த விவாதங்கள் தற்போது அதிகளவில் பேசப்பட்டு வரும் நிலையில், அவர் படப்பிடிப்புக்குத் தாமதமாக வருவது, அட்வான்ஸ் பணத்தைத் திருப்பிக் கொடுக்க மறுப்பது போன்ற செயல்களால் இயக்குநர்கள் சிரமப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் நிலவின. இந்தச் சூழலில், கார்த்திக்கை அணுகியபோது இயக்குநர் ஷங்கர் நடந்துகொண்ட விதம் குறித்து, இயக்குநர் வெங்கடேஷ் பகிர்ந்துள்ளார்.
இயக்குநர் ஷங்கர், ‘ஐ’ திரைப்படத்திற்காக முதலில் கார்த்திக்கை அணுகச் சொல்லி வெங்கடேஷிடம் கேட்டுள்ளார். பெரிய கதாநாயகனான கார்த்திக் மற்றும் பெரிய இயக்குநரான ஷங்கர் இருவரும் பொதுவான இடத்தில் சந்தித்துப் பேச வேண்டும் என்று வெங்கடேஷ் கார்த்திக்கிடம் வலியுறுத்தியுள்ளார்.
ஆனால், ஷங்கர் அலுவலகத்திற்கு வர தனக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்று கார்த்திக் தெரிவித்த போதிலும், ஷங்கர் மறுத்துவிட்டார். “நான் பார்த்து வளர்ந்த கதாநாயகன் அவர், நான் அவர் அலுவலகத்திற்கு வருகிறேன்” என்று கூறி, ஷங்கர் தானே கார்த்திக்கின் அலுவலகத்திற்குச் சென்று கதை சொல்லியுள்ளார். கதை கேட்ட பிறகு கார்த்திக் அப்படத்தில் நடிக்க மறுத்துள்ளார். கார்த்திக்கின் ஈகோ பாதிக்கப்படாமல், இயக்குநரும், நடிகருமான வெங்கடேஷ் மூலம் ஷங்கர் காய் நகர்த்திய விதம், பலரின் கவனத்தையும் தற்போது ஈர்த்துள்ளது.
