திரையுலகைத் தொடர்ந்து அரசியலிலும் தடம் பதிக்க நடிகர் தனுஷ் தீவிரமாக ஆயத்தமாகி வருகிறார். சமீபத்தில் தனது ரசிகர் மன்றத்திற்கு புதிய கொடியை அறிமுகப்படுத்தியதுடன், ஆதரவாளர்களுடன் தொடர் சந்திப்புகளையும் நடத்தி வருகிறார். இதன் தொடர்ச்சியாக, இன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ள அவர், தனது அரசியல் பிரவேசத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு நன்னாளையும் குறித்துவிட்டதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். நடிகர் ரஜினிகாந்த் முன்னெடுக்க நினைத்த ஆன்மீக அரசியலை, அவரது ஆசியுடன் கையில் எடுத்துத் தொடர தனுஷ் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதேவேளையில், தமிழக அரசியல் சூழலில் தனிக்கட்சி தொடங்கி உடனடியாக ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா என்ற தயக்கமும் தனுஷிடம் நிலவுகிறது. இதனால் புதிய கட்சி தொடங்குவதற்கு பதிலாக, பாஜகவில் இணைந்து தனது தேர்தல் அரசியலைத் தொடங்கலாமா என்றும் அவர் தனது நெருங்கிய வட்டாரங்களுடன் தீவிரமாக ஆலோசித்து வருகிறார். தமிழகத்தைச் சேர்ந்த பிரபல கணக்காளர் ஒருவரின் வழிகாட்டுதலின் பேரில், தனது அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளுக்கான வேலைகளில் தனுஷ் இறங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாஜக தேசியத் தலைமையின் முக்கியப் புள்ளி ஒருவர் தனுஷிடம் இது குறித்துப் பேசி வருவதாகவும், அவரைத் தங்கள் கட்சியில் இணைக்க பாஜக ஆர்வம் காட்டி வருவதாகவும் தெரிகிறது. தமிழகத்தில் பாஜகவைக் கடுமையான கொள்கை எதிரியாக அறிவித்து தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அரசியல் செய்துவரும் சூழலில், அவருக்குப் போட்டியாக தனுஷைக் களமிறக்க பாஜக திட்டமிடுவதாகக் கூறப்படுகிறது. புதுக் கட்சி தொடங்கப்போகிறாரா அல்லது பாஜகவில் இணையப்போகிறாரா என்ற தனுஷின் இறுதி அறிவிப்பை எதிர்நோக்கி தமிழக அரசியல் களம் சூட பிடித்துள்ளது.
