BREAKING: “சசிகலா, டிடிவியை உடனே சேர்க்கணும்”… எடப்பாடிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய மூத்த தலைவர்கள்… இறங்கி அடிக்கும் வேலுமணி டீம்….!

By Nanthini on ஆவணி 3, 2026

Spread the love

அதிமுகவில் உட்கட்சிப் பூசல்களும் அதிருப்திகளும் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், கட்சியின் மூத்த தலைவர்களான எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், சி.வி. சண்முகம் மற்றும் கே.பி. அன்பழகன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்து அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தங்களுக்கு வழங்கிய புதிய பொறுப்புகளை ஏற்கப் போவதில்லை என அவர்கள் ஒட்டுமொத்தமாக அறிவித்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி மாவட்டம் வாரியாக நடத்தி வரும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டங்களை ஏற்கெனவே புறக்கணித்து வந்த இந்த மூத்த தலைவர்கள், தற்போது நேரடியாகவே தலைமைக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியுள்ளது அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, தேர்தல் தோல்விக்கான உண்மையான காரணங்களை ஆராயாமல் எடப்பாடி பழனிசாமி தன்னிச்சையாக செயல்பட்டு வருவதாகக் கடுமையாகக் குற்றம்சாட்டினார். இதுவரை 200-க்கும் மேற்பட்ட பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களை அவர் கட்சியிலிருந்து நீக்கியுள்ளதாக சுட்டிக்காட்டிய வேலுமணி, தற்போதைய தலைமைக்கு எதிராகத் தக்க நேரத்தில் தகுந்த முடிவு எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்டோரை மீண்டும் அதிமுகவில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர்கள் கூட்டாக முன்வைத்துள்ளனர்.

   

முன்னதாக, தமிழக சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது தவெக அரசிற்கு ஆதரவாகச் செயல்பட்டதாகக் கூறி, எஸ்.பி.வேலுமணி, சி.வி. சண்முகம் உள்ளிட்டோரின் மாவட்டச் செயலாளர் பதவிகளை எடப்பாடி பழனிசாமி பறித்து, புதியவர்களை நியமித்தார். பின்னர், வேலுமணி உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து மீண்டும் கட்சியில் இணைந்த போதிலும், அவர்களுக்குப் பழைய முக்கியப் பொறுப்புகள் வழங்கப்படாமல் இரண்டாம் கட்டப் பொறுப்புகளே வழங்கப்பட்டன. இதனால் கடும் அதிருப்தியில் இருந்த இவர்கள், வழங்கப்பட்ட பொறுப்புகளை ஏற்க மறுத்து புறக்கணித்து வருகின்றனர். சி.வி. சண்முகம் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்காமலே விலகி இருந்து வருகிறார்.

   

தற்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அதிருப்தி நிர்வாகிகள் அணிதிரண்டு வரும் சூழலில், கட்சியின் இந்த நான்கு முக்கியத் தலைவர்களும் ஒரே மேடையில் இணைந்து குரல் கொடுத்திருப்பது கட்சிக்குள் மிகப்பெரிய புயலைக் கிளப்பியுள்ளது. எடப்பாடி பழனிசாமியின் ‘வலது கரமாக’த் திகழ்ந்த மூத்த தலைவர்களே இப்போது அவருக்கு எதிராகத் திரும்பியிருப்பதால், அதிமுகவின் எதிர்கால அரசியலிலும் தலைமைத்துவத்திலும் இது மிகப்பெரிய மாற்றங்களுக்கும் திருப்பங்களுக்கும் வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.