தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக கலக்கியவர் தான் நடிகர் தாமு. 1992 ஆம் ஆண்டு கே.பாலச்சந்தரின் வானமே எல்லை என்ற திரைப்படம் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். அதன் பிறகு 20 ஆண்டுகள் முழு நேர நகைச்சுவை நடிகராக ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல் மற்றும் விஜய் உள்ளிட்ட பல நடிகர்களின் திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து கலக்கியுள்ளார். குறிப்பாக விஜயின் கில்லி திரைப்படத்தில் இவர் நடித்த ஓட்டேரி நரி கதாபாத்திரம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தது.

இப்படி தமிழ் சினிமாவில் பிஸியாக இருந்த இவரை திடீரென்று திரைப்படங்களில் காண முடிவதில்லை. திரைப்படங்களில் இருந்து விலகி கடந்த 10 ஆண்டுகளாக நடிகர் தாமு கல்வி சேவை ஆற்றி வருகின்றார். இது மக்களுக்கு தெரியாமல் இருந்தாலும் அரசாங்கத்திற்கு அது தெரிந்தது தான். இதனால் கல்வித்துறையில் அவர் மேற்கொண்ட முயற்சிகளுக்காக தேசிய கல்வி வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பாக ராஷ்டிரியா சிக்ஷா கௌரவ் புரஷ்கார் 2021 என்ற தேசிய கல்வியாளருக்கான கௌரவ விருது இவருக்கு கிடைத்தது. கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக காணொளி மூலமாக நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்வித்துறையில் நடிகர் தாமு செய்த பங்களிப்புக்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது.

தமிழ் சினிமாவில் நடிகராக கலக்கிய இவர் திடீரென்று கல்வி சேவையில் ஈடுபட்டதற்கு பின்னால் ஒரு பெரிய காரணம் உள்ளது. அதாவது மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் தான் இவர் கல்வி சேவையாற்ற முக்கிய காரணம். அதாவது கோவையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அப்துல் கலாம் வருவதற்கு தாமதமான காரணத்தினால் தன்னுடைய மிமிக்ரி திறமையை வைத்து சுமார் 3 மணி நேரம் அங்கு கூடியிருந்த கூட்டம் மத்தியில் சிறப்பு உரையாற்றி அனைவரையும் நெகிழ வைத்தார் தாமு.

இதனை அறிந்த அப்துல் கலாம் அந்த மேடையிலேயே நீ கல்விப் பணிக்காக உன்னை கொடுத்து விடு என்று கூறியுள்ளார். உடனே சரி என்று தாமு கூறிவிட்டார். அன்று அப்துல் கலாம் சொன்ன அந்த வார்த்தைக்காக அன்றே ஆரம்பித்த பணியை 10 வருடங்களை கடந்தும் தாமு இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறார். அப்துல் கலாம் ஐயா வகுத்த கல்வி குறித்த பத்து கட்டளைகளை மாணவர்களுக்குள் உருவேற்றி அவர்களுக்கு கற்பதில் இருக்கும் சிரமங்களையும் பயன்களையும் போக்குவதை தன்னுடைய தலையாயப் பணியாக இப்போதும் செய்து வருவதாக தாமு கூறியுள்ளார்.
