தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மொழிகளிலும் காமெடி நடிகராக பிரபலமானவர் நடிகர் ஜனகராஜ். 80 மற்றும் 90களில் வந்த அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களிலும் முக்கிய காமெடியன் ஜனாகராஜ் தான். 1978ல் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தில் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
ஜனகராஜ் நடிகர் மட்டுமில்லாமல் ஒரு கிடாரிஸ்ட்டும் ஆவார். தமிழ் சினிமாவில அதிகளவில் உலக சினிமா படங்கள் பார்த்து அறிவை வளர்த்துக் கொண்ட நடிகர்களில் ஒருவர். ஜனகராஜுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து படம் எடுத்தவர்களில் நடிகர் கமல்ஹாசனும் ஒருவர்.
அவரோடு ஜனகராஜ் இணைந்து நடித்த நாயகன், அபூர்வ சகோதரர்கள் மற்றும் குணா போன்ற படங்கள்தான் அவரின் கேரியரில் அவர் நடித்த சிறப்பான படங்கள் என சொல்லலாம். அதிலும் குறிப்பாக அபூர்வ சகோதரர்கள் படத்தில் அவர் நடித்திருந்த கதாபாத்திரம் நகைச்சுவையின் உச்சமாக அமைந்தது. தொடர்ந்து நடித்து முன்னணி நடிகராக வரவேண்டிய ஜனகராஜ் தன்னுடைய குடிப்பழக்கத்தால் 90 களில் வாய்ப்பை இழந்தார். அதன்பின்னர் இப்போது மீண்டும் சினிமாவில் நடிக்கத் தொடங்கிய்ள்ளார்.
ஜனகராஜ் பற்றி பேசியுள்ள அவரின் நெருங்கிய நண்பரான வாகை சந்திரசேகர், “ஜனாவும் நானும் பாரதிராஜா சார் படங்களில் நடிக்க ஆரம்பித்ததில் இருந்தே நல்ல நண்பர்கள். ஜாலியாக ஊர் சுற்றிக் கொண்டே இருப்போம். ஜனா நான் சொன்னால் அந்த பேச்சுக்குக் கட்டுப்படுவான். இடையில் அவன் ஒரு மாதிரி (குடிப்பழக்கம்) ஆகிவிட்டான்.
அப்போது நானும் அவனும் மணிவண்ணன் சார் படம் ஒன்றில் நடித்தோம், அவனை யாராலும் கண்ட்ரோல் பண்ண முடியாது. அப்போது மணிவண்ணன் சார் வந்து என்னிடம் பேசினார். அப்போது அவனுக்கு எப்படி எப்படி நடிக்கணும்னு நான் சொல்ல சொல்ல, அப்படியே நடித்தான்.” எனக் கூறியுள்ளார்.