தமிழில் கமர்சியல் திரைப்படங்களை தவிர்த்து சில சவாலான கதைகளை தேர்ந்தெடுத்து பலதரப்பட்ட வித்தியாசமான படங்களை கொடுக்க வேண்டும் என்று நினைக்கும் ஒரு சில நடிகர்களில் முக்கியமானவர் தான் பரத். திருச்சியை பூர்விகமாகக் கொண்ட பரத் சினிமா மீது இருந்த ஆசையால் சென்னைக்கு வந்தார். பிறகு 2003 ஆம் ஆண்டு பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் திரைப்படம் மூலம் தான் பரத் முதன் முதலாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தனது முதல் அறிமுகத்திலேயே நமக்கு மிகவும் பரிச்சயமான பரத், விஷால் அறிமுகமான செல்லமே திரைப்படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் மிரட்டி இருந்தார்.

இவ்வாறு ஆரம்பத்திலேயே வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து வந்த பாரத் இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கிய காதல் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சிறந்த கதாநாயகனாக மக்கள் மனதில் இடம் பிடித்தார். இந்த திரைப்படம் அவருடைய சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதன் பிறகு இவர் தேர்ந்தெடுத்த வெயில், சேவல் உள்ளிட்ட திரைப்படங்கள் இவருக்கு ஒரு நல்ல கதாநாயகன் என்ற அந்தஸ்தை பெற்று தந்தது.

ஆனால் நேபாளி திரைப்படத்தில் மிகவும் ஆபாசமாக இவர் நடித்திருக்கிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்ததால் ஒரு ஆக்சன் ஹீரோவாக வேண்டும் என்று முடிவெடுத்து பரத் பழனி மற்றும் திருத்தணி ஆகிய திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்தார். ஆனால் அந்த திரைப்படங்கள் தோல்வியை தழுவியதால் தனக்கு வாய்ப்பு கிடைத்தால் போதும் என்று நினைத்து பல திரைப்படங்களில் நடித்தார்.

கடந்த 20 ஆண்டுகளில் 50 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ள பரத் ஒரு வெற்றி படத்திற்காக தற்போது வரை ஏங்கிக் கொண்டிருக்கிறார். அப்படி வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் துபாயில் டாக்டராக இருக்கும் தனது மனைவியுடன் செட்டிலாக உள்ளதாக பரத் ஒரு பேட்டியில் வருத்தத்துடன் கூறியுள்ளார்.
