தமிழ் சினிமாவில் இன்று வசூல் மன்னன்களாக திகழ்ந்து வருபவர்களில் ஒருவர் அஜித். அஜித் தனது ஆரம்ப காலகட்டங்களில் வெற்றிக்காக போராடிக் கொண்டிருந்த போது அவருக்கு வெற்றி படத்தைக் கொடுத்தவர் இயக்குனர் வசந்த். அவர் இயக்கிய ஆசை திரைப்படம்தான் அஜித்தின் முதல் சூப்பர்ஹிட் படமாக அமைந்தது.
அதன் பிறகு காதல் மன்னன், வாலி, அமர்க்களம் மற்றும் முகவரி என அடுத்தடுத்து ஹிட் படங்களாகக் கொடுத்து முன்னணி நடிகராக உயர்ந்தார். ஆனால் அவரை ஒரு ஆக்ஷன் ஹீரோவாக்கியது முருகதாஸின் தீனா திரைப்படம்தான். அந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதன் பின்னர் ஆக்ஷன் பாதையில் அஜித் பயணப்பட்டார்.
90 களில் சாக்லேட் பாயாக வலம் வந்த அஜித் பல காதல் படங்களில் நடித்து பெண்களின் ஆசைநாயகனாக இருந்தார். தீனா படம்தான் அவரை முழுமையாக ஆக்ஷன் ஹீரோவாக மாற்றியது. அதன் பின்னர் அவர் நடித்த அனைத்துப் படங்களும் ஆக்ஷன் மசாலாப் படங்கள்தான்.

#image_title
அஜித் திரைக்கு முன்னால் பல சாகசங்கள் செய்வதைப் போலவே திரைக்குப் பின்னாலும் பல அரிய நற்காரியங்களை செய்து வருகின்றார். ஆனால் அதைப் பற்றி அவர் பெரிதாக விளம்பரப் படுத்திக் கொள்வதில்லை. இதைப் பற்றி அஜித்தின் சக நடிகரான பாவா லட்சுமணன் ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.
அதில் “அஜித்திடம் உடம்பு சரியில்லை என்று சொல்லி யாராவது சென்றால் அவர் கையில் பணம் கொடுக்க மாட்டார். அவர் சொல்லும் மருத்துவமனையில் போய் சேர்ந்து கொண்டால் சிகிச்சை செலவை அவர் பார்த்துக் கொள்வார். நிறைய பேர் உடம்பு சரியில்லை என சொல்லி காசு வாங்கி அவரை ஏமாற்றி விட்டார்கள். இதுபோல எப்படியும் 1000 பேருக்கு மேல் அவர் உதவியிருப்பார் என்று நினைக்கிறேன்.” எனப் பேசியுள்ளார். இதே போல மறைந்த நடிகர் மாரிமுத்து கூட தன்னுடைய மகனின் கல்வி செலவுகளை அஜித் பல ஆண்டுகள் பொறுப்பேற்றுக் கொண்டதாகக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
