நடிகர் ஆனந்தராஜ் பாஷா, சூரியவம்சம், போக்கிரி உள்ளிட்ட திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார். தற்போது அறிமுக இயக்குனரான ஏ.எஸ் முகுந்தன் இயக்கத்தில் மெட்ராஸ் கம்பெனி என்ற பெயரில் படம் உருவாகியுள்ளது. இந்த மாதம் 14-ஆம் தேதி ரிலீசாக உள்ள படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
அந்த விழாவில் பங்கேற்ற நடிகர் ஆனந்தராஜ் கூறியதாவது, இந்த படத்தில் என்னுடன் நடித்த அனைத்து நடிகர்களுக்கும் நன்றி. என்னால் பயமுறுத்தவும் முடியும். சிரிக்க வைக்க முடியும். எங்களிடம் பணம் குறைவாக இருக்கலாம். ஆனால் நாங்கள் மகிழ்ச்சியாக உள்ளோம். இந்த துறைக்கு வரும்போது எனக்கென்று யாரும் கிடையாது. பின்புலமும் கிடையாது. என் தந்தை என்னை விட இந்த துறையை அதிகமாக நேசித்தவர்.
நான் இன்று நடிகராக நிற்கிறேன் என்றால் அதற்கு என் அப்பா தான் காரணம். எனக்கு இந்த துறையில் போட்டியில்லை என்று சொல்ல முடியாது. நானும் சராசரி நடிகன் தான். என்னை பலர் முதுகில் குத்தினார்கள். அதை தாண்டி தான் வந்திருக்கிறேன். வீட்டிற்கு வந்து ஒரு படத்திற்கு பேசுவார்கள். ஆனால் அந்த படத்தில் நான் இருக்க மாட்டேன். ஒரு கலையை கலையாக மட்டும் பார்க்க வேண்டும். மெட்ராஸ் மாஃபியா கம்பெனி படம் குறித்த நேரத்தில் முடிக்க காரணம் இயக்குனர் தான் என கூறியுள்ளார்.
