தமிழ் சினிமாவில் சிலர் பெரிய உதவிகளை செய்தாலும் அதை விளம்பரப்படுத்துவது இல்லை. அதில் நடிகர் அஜீத்குமாரும் ஒருவர். பிரபல பத்திரிகை ஒன்றில், 30 ஆண்டுகளுக்கு மேலாக ஓவியராக பணிபுரிபவர் அவர். அவரது ஓவியங்களை பார்த்து, அடிக்கடி அவரை அழைத்து பாராட்டுபவர் நடிகர் சிவக்குமார். ஏனெனில், அவரும் ஒரு ஓவியர். இந்நிலையில், பத்திரிகை ஓவியரின் மகன்கள் இருவரும் நன்றாக படித்தனர். ஒரு கட்டத்தில் அவரது இளையமகன், அமெரிக்காவுக்கு படிக்க செல்கிேறன். அங்கு பகுதிநேரமாக ஏதாவது வேலை செய்து, அந்த வருமானத்தில் படிப்பு செலவை சமாளித்துக்கொள்கிறேன் என்க, ஓவியரும் அமெரிக்காவுக்கு மகனை அனுப்பி வைக்கிறார்.

ஆனால் அங்கு கல்லூரி நிர்வாகம், சட்ட சிக்கல் காரணமாக அந்த ஓவியரின் மகனை, பகுதிநேர பணிசெய்ய அனுமதி மறுக்கிறது. அதனால், சென்னையில் இருந்து ஓவியரே, தன் மகனுக்கான படிப்பு செலவை அனுப்பி வைக்கிறார். கிடைக்கிற வருமானத்தில், நிறைய மிச்சம் பிடித்து, செலவுகளை குறைத்து, பலரிடம் கடன் வாங்கி, பணம் அனுப்பி வைக்கிறார்.
ஒரு கட்டத்தில் மிகுந்த நெருக்கடியில் பணம் அனுப்ப முடியாத நிலை ஓவியருக்கு ஏற்படுகிறது, இறுதியாண்டு படிக்கும் மகன், பணம் கட்டாவிட்டால் கல்லூரியை விட்டு வெளியே அனுப்பி விடுவார்கள் என புலம்புகிறார். இந்த நேரத்தில், தனது நீண்ட கால நண்பர், நடிகர் சிவக்குமாரை அந்த ஓவியர் போனில் தொடர்பு கொள்கிறார். விஷயத்தை கேள்விப்பட்ட அவர், சூர்யாவும் கார்த்தியும் கோடிக்கணக்கில் பணம் செலவழித்து வீடு கட்டுவதால் என்னிடம் பணம் இல்லை. கஷ்டத்தில் இருக்கிறேன் எனக் கூறுகிறார்.

அதற்கு ஓவியர், அகரம் பவுண்டேசன் மூலம் உதவ முடியுமா எனக்கேட்க, அதில் முக்கிய பொறுப்பு வகித்த ஞானவேல் ராஜாவை தொடர்பு கொள்ள சொல்கிறார். ஞானவேல் ராஜாவிடம் பேச, அனாதையாக இருந்தால் மட்டுமே அந்த மாணவனுக்கு உதவுவோம். ரூல்ஸ்படி உங்களுக்கு உதவ முடியாது என்கிறார். ஏமாற்றமடைந்த ஓவியர், சிவக்குமாரை மீண்டும் போனில் தொடர்புகொள்ள அவர் போனை எடுக்கவில்லை. ஆனால், ஞானவேல்ராஜா ஓவியரை போனில் அழைத்து, நான்தான் முடியாது என சொல்லிவிட்டேனே, எதற்காக அவருக்கு போன் செய்து தொந்தரவு பண்றீங்க, என கடிந்துள்ளார்.

இனி என்ன செய்வது என தவித்த ஓவியர், பலரிடம் போராடி கடைசியில் அஜீத் வீட்டு கதவுகளை தட்டி விஷயத்தை சொல்லி இருக்கிறார். உங்கள் மகனின் முழு விவரங்களை கொடுங்க, பையனின் மொத்த படிப்பு செலவையும் செலுத்தி விடுகிறோம் என்று கூறி, அதன்படியே செய்யப்பட்டுள்ளது. இப்படி ஒரு மாணவனின் படிப்புக்கான மொத்த செலவையும் தந்துவிட்டு, அதற்கான விளம்பரமே காட்டாமல் அமைதியாக இருந்திருக்கிறார் நடிகர் அஜீத்குமார்.
