தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் தனித்துவமான பண்பை கொண்டவர். சினிமாவில் நடிப்பதோடு தன்னுடைய வேலை முடிந்து விட்டது என்று நினைக்கக் கூடியவர் தான் அஜித். கடந்த சில வருடங்களாகவே எந்த வித டிவி சேனல்களிலும் அல்லது தனிப்பட்ட முறையிலும் youtube சேனல்களுக்கு கூட இவர் பேட்டியளிப்பதை தவிர்த்து வருகின்றார். அதனைப் போலவே பட விளம்பர நிகழ்ச்சிகளிலும் கூட அஜித் பங்கேற்பது கிடையாது. சினிமாவை தாண்டி தனக்கு பிடித்த விஷயங்களை செய்து வருவதில் ஆர்வம் காட்டக் கூடியவர். கார் பந்தயங்கள் மூலம் அவரது கனவை நிறைவேற்றும் வேளையில் முழு ஈடுபாட்டோடு செய்து கொண்டிருக்கின்றார். அதில் தொடர்ந்து பல சாதனைகளையும் செய்து வருகிறார்.

சினிமா மற்றும் கார் பந்தயத்தில் சிறந்து விளங்கக்கூடிய அஜித்குமாரின் செயலை பாராட்டும் விதமாக சசமீபத்தில் குடியரசு தலைவர் அவருக்கு பத்மபூஷன் விருது வழங்கிய கௌரவித்திருந்தார். வாழ்ந்தால் அஜித்தை போலத்தான் வாழ வேண்டும் என அவருடைய ரசிகர்கள் ரோல் மாடலாக எடுத்து கொண்டாடி வருகிறார்கள். ஆனால் அப்படிப்பட்ட அஜித்குமாருக்கு ரோல் மாடலாக ஒருத்தர் இருப்பது ஆச்சரியம்தான். நேற்று முன்தினம் அஜித் அயர்டன் சென்னா என்பவரின் சிலைக்கு சென்று மரியாதை செலுத்திய வீடியோ இணையத்தின் வைரலானது.

இதனால் அவருடைய ரசிகர்கள் அவர் யாரென்று இணையத்தில் தேட தொடங்கியுள்ளன. மோட்டார் சாகச உலகத்தில் தனி ஒரு அடையாளம் பதித்த பிரேசிலியன் ஃபார்முலா 1 ஓட்டப்பந்தய வீரர் தான் இந்த அயர்டன் சென்னா. தன்னுடைய திறமையால் பெரிய அளவில் ரசிகர்களை ஈர்த்தவர். கடந்த 1960 ஆம் ஆண்டு மார்ச் 21ஆம் தேதி பிரேசிலின் சாவோ பாவ்லோவில் பிறந்தவர். சிறுவயதிலேயே கார்களை இயக்குவதில் ஆர்வம் கொண்டிருந்த இவர் கார்டின் மூலமாகவே தனது ரேசிங் வாழ்க்கையையும் தொடங்கினார். தன்னுடைய சிறுவயதிலேயே ரேசிங் துறையில் வந்தவர்.
கடந்த 1984 ஆம் ஆண்டு ஃபார்முலா 1 பந்தயத்தில் தன்னுடைய பயணத்தை தொடங்கினார். பல அணிகளுக்காக பந்தயத்தில் பங்கேற்ற இவர் Mclaren அணியுடன் கூட்டினைந்து 1988, 1990 மற்றும் 1991 ஆகிய ஆண்டுகளில் மூன்று உலக சாம்பியன் பட்டங்களையும் வென்றுள்ளார். இவருடைய பந்தய நுட்பம், நேர்த்தி மற்றும் எதிரியை மதிக்கும் மனப்பான்மை ரசிகர்கள் மத்தியில் இவரை தெய்வீக அந்தஸ்திற்கு உயர்த்தியது. இவர் பங்கேற்ற பல சிக்கலான போட்டிகளில் சாதித்த வெற்றிகள் வரலாற்றில் நினைவாக நிறைந்துள்ளன.

1994ஆம் ஆண்டு அஜித்தின் பிறந்தநாளான அன்று மே 1ஆம் தேதி, இத்தாலியின் இமோலா பந்தய திடலில் நடைபெற்ற San Marino Grand Prix போட்டியின் போது சென்னா ஒரு மோசமான விபத்தில் சிக்கி உயிரிழந்தார். சென்னாவின் மரணம் கார் ரேஸ் போட்டிகளில் பல பாதுகாப்பு மாற்றங்களை ஏற்படுத்தியது. பிரேசிலில் தேசிய துக்கமாக அறிவிக்கப்பட்டது. அவரின் நினைவாக Instituto Ayrton Senna என்ற தொண்டு நிறுவனம் அமைக்கப்பட்டு ஏழை குழந்தைகளுக்கான கல்வி மற்றும் வளர்ச்சி பணிகளை இன்று வரை முன்னெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
