தமிழ் சினிமாவில் 90 காலகட்டங்களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் அப்பாஸ். இவர் இயக்குனர் கதிர் இயக்கத்தில் வெளியான ‘காதல் தேசம்’ என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படமே இவருக்கு வெற்றி படமாக அமைந்தது. அதுமட்டுமில்லாமல் எந்தவொரு அறிமுக நடிகருக்கும் கிடைக்காத மிகப்பெரிய வரவேற்பும் அவருக்குக் கிடைத்தது.
இவர் மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவை பூர்விகமாகக் கொண்டவர். இவருடைய முழு பெயர் மிர்சா அப்பாஸ் அலி. நடிக்க வருவதற்கு முன்பே மாடலிங் துறையில் அதிக ஆர்வம் கொண்ட இவர் தன்னுடைய சிறு வயதிலிருந்தே மாடலிங் துறையில் பணியாற்றியுள்ளார். அப்படிதான் இயக்குனர் கதிருடன் பழக்கம் ஏற்பட்டு அவர் இவரை நடிக்கவைத்துள்ளார்.
காதல் தேசம் வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹிட்டானபோது அவருக்கு அடுத்தடுத்து பல முன்னணி இயக்குனர்கள் இயக்கத்தில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் அவர் எங்கோ கோட்டை விடவே, அவரின் திரைவாழ்க்கை அதன் பின்னர் பிரகாசமாக செல்லவில்லை. அவர் கதாநாயகனாக நடித்த படங்களும் தோல்விப் படங்களாக அமைந்தன.

இதனால் வில்லன் கதாபாத்திரங்களிலும், துணைக் கதாபாத்திரங்களிலும் நடித்து வந்த அவர் ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டே விலகி நியுசிலாந்துக்கு சென்று செட்டில் ஆகிவிட்டார். இந்நிலையில் இப்பொது 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் சினிமாவில் கம்பேக் கொடுக்க உள்ளார்.
இந்நிலையில் இப்போது இயக்குனர் சற்குணம் இயக்கும் புதிய வெப் தொடரின் மூலம் கம்பேக் கொடுக்கவுள்ளார். இந்த தொடரை இயக்குனர்கள் புஷ்கர் மற்றும் காயத்ரி ஆகியோர் தயாரிக்க முன்னணி ஓடிடி நிறுவனம் பைனான்ஸ் செய்கிறது.
