எகிப்தின் கெய்ரோ நகருக்கு தெற்கே உள்ள கீசா மாகாணத்தின் அல்-அய்யாத் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரண்டு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில், ஒரு ரயிலின் ஓட்டுநர் உட்பட குறைந்தது 7 பேர் உயிரிழந்தனர் மற்றும் 125 பேர் காயமடைந்தனர். கெய்ரோவிலிருந்து அஸ்வான் நோக்கிச் சென்று அதே பாதையில் நின்றுகொண்டிருந்த ரயிலின் பின்புறப் பெட்டி மீது, ஃபாயூம் நோக்கிச் சென்ற மற்றொரு ரயில் பலமாக மோதியதால் இந்த கொடூர விபத்து நிகழ்ந்தது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்தவுடன் புலனாய்வு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணையைத் தொடங்கினர். விபத்து நடந்த உடனே அப்பகுதி மக்கள் உடனடியாக மீட்புப் பணிகளில் இறங்கி, சிதைந்த ரயில் பெட்டிகளுக்குள் சிக்கியிருந்த பயணிகளை மீட்டதோடு அவசர உதவிச் சேவைகளுக்கும் தகவல் கொடுத்தனர். விபத்தில் இருந்து தப்பிய பயணிகள் அந்த நேரத்தில் ஏற்பட்ட பயம் மற்றும் குழப்பமான சூழலையும், விபத்தால் கிளம்பிய தூசியால் சுவாசிக்க கடினமாக இருந்ததையும் விவரித்தனர்.
https://twitter.com/CNNnews18/status/2119616259776217530/video/1
எகிப்தின் சுகாதார அமைச்சகம் இந்த விபத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை உறுதிப்படுத்தியுள்ளது. காயமடைந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், தற்பொழுது 70-க்கும் மேற்பட்ட பயணிகள் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
