பத்மநாபபுரம் அரண்மனை கன்னியாகுமரி மாவட்டம் தக்கலைக்கு அருகாமையில் உள்ள பத்மநாபபுரம் என்னும் ஊரில் அமைந்துள்ளது. இது கல்குளம் அரண்மனை என்றும் அழைக்கப்படுகிறது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தினால் கட்டப்பட்ட அரண்மனை ஆனதால் இது கேரளா அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த அரண்மனை மேற்கு தொடர்ச்சி மலையின் பகுதியான வேளி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது.
1601 ஆம் ஆண்டு திருவிதாங்கூர் சமஸ்தானத்தை ஆண்ட இரவி வர்ம குலசேகர பெருமாள் என்ற மன்னரால் இந்த அரண்மனை கட்டப்பட்டது என்று கூறப்படுகிறது. தற்போதுள்ள முழு அரண்மனையும் அவர் கட்டப்பட்டது அல்ல. முகப்பில் இருக்கும் தாய் கொட்டாரம் தான் அவர் கட்டியது. அதற்குப் பிறகு ஆட்சிக்கு வந்த அவரின் மருமகனான அநிலம் திருநாள் மார்த்தாண்ட வர்மா மன்னர்தான் அந்த அரண்மனையை விரிவுபடுத்தி கட்டியதாக கூறப்படுகிறது.
கேரள கட்டடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக இந்த பத்மநாபபுரம் அரண்மனை விளங்குகிறது. இது காலம் காலமாக பராமரிக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இந்த அரண்மனையின் எல்லா பகுதியிலும் இயற்கை ஒளியை உள்ளிருக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. இந்த பத்மநாபபுரம் அரண்மனையில் 2000 பேர் அமர்ந்து உணவு உண்ணும் அளவுக்கு மிகப்பெரிய அன்னதான கூடம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அரண்மனையில் பூ முகம் என்ற நுழைவு கட்டடம் மராவேலைப்பாடுகளுடன் கட்டப்பட்டிருக்கிறது. இந்த பூமுகத்தில் உள்ள கதவில் 90 வகை தாமரைகள் செதுக்கப்பட்டுள்ளன. இந்த அரண்மனையின் மிகப் பழமையான பகுதி தாய் கொட்டாரமாகும். இது 1550க்கு முன் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இது தவிர மன்னரின் அரசவையாக இருந்த மந்திர சாலை இருக்கிறது. அரசர்கள் அரசிகள் படுக்கை அறைகள் கொண்ட உப்பரிகை மாளிகை இருக்கிறது.
கேரள கட்டடக்கலை மட்டுமல்லாமல் விஜயநகர கட்டிடக்கலை பிரதிபலிக்கும் விதமாக நவராத்திரி மண்டபம் இந்த பத்மநாபபுரம் அரண்மனையில் அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த மண்டபத்தில் நவராத்திரி காலங்களில் நடன நிகழ்ச்சிகள் நடக்குமாம். குடும்பத்தை சேர்ந்த அரச பெண்கள் கலைநிகழ்ச்சிகளை கண்டு ரசிக்க ஏதுவாக மண்டபத்தை ஒட்டியே சில அறைகள் இருக்குமாம். அந்த அறைகளில் மர துளைகள் இருக்குமாம். இந்த பத்மநாபபுரம் அரண்மனை இன்றளவும் கேரளா அரசால் சிறப்பாக பராமரிக்கப்பட்டு சிறந்த சுற்றுலாத்தலமாக இருக்கிறது. மன்னர் காலத்தில் அரசர்கள் எப்படி வாழ்ந்தார்கள் அவர்கள் வாழ்க்கை முறை எப்படி இருந்திருக்கும் என்பதை இந்த அரண்மனைக்கு செல்லும் போது நம்மளால் உணர முடியும்.