தீபாவளி வந்துவிட்டது. தீபாவளி என்றாலே பட்டாசுகள் புத்தாடைகள் இனிப்பு மற்றும் பலகாரங்கள் என்று விமர்சையாக கொண்டாடப்படும். ஆனால் இந்து மதத்தில் தீபாவளி அன்று மிக முக்கியமாக செய்யப்படும் ஒரு பூஜை தான் லக்ஷ்மி குபேரர் பூஜை. இது ஏன் தீபாவளி அன்று நடத்தப்படுகிறது மற்றும் இந்த வருடத்திற்கான பூஜைக்கான நல்ல நேரம் மற்றும் வழிபடும் முறை என்ன என்பதைப் பற்றி இனி காண்போம்.

தீபாவளி அன்று மாலை நேரத்தில் ஒவ்வொரு ஆண்டும் லட்சுமி குபேரர் பூஜை வழிபாடு செய்வது வழக்கம். செல்வம் சேர்வதற்கும் வீட்டில் நன்மைகள் நடைபெறுவதற்கும் நல்ல காரியங்கள் நடப்பதற்கும் இந்த பூஜை நடத்தாப்படுத்தப்படுகிறது. தொழில் வளர்ச்சிக்காகவும் இந்த லட்சுமி குபேரர் பூஜை செய்யப்படுகிறது. வியாழக்கிழமை என்றாலே குபேரருக்கு உகந்த நாளாகும். இந்த முறை தீபாவளி வியாழக்கிழமை வருவதால் இந்த முறை இது நடத்தப்படும் லட்சுமி குபேரர் பூஜை மிகவும் விசேஷமானதாக பார்க்கப்படுகிறது.
தீபாவளி அன்று இந்த லட்சுமி குபேரர் பூஜையை மாலை நேரத்தில் அமாவாசை திதி இருக்கும் நேரத்தில் தான் செய்ய வேண்டும். இந்த ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி மாலை 4 .29 மணிக்கு அமாவாசை திதி துவங்குகிறது நவம்பர் ஒன்றாம் தேதி மாலை 6:25 வரை அமாவாசை திதி உள்ளது. அதனால் இரு நாட்களிலும் லட்சுமி குபேரர் பூஜை செய்யலாம்.
தீபாவளி அன்று அசைவம் சாப்பிடுபவர்கள் அன்றைய தினம் வழிபட முடியாது என்று நினைப்பவர்கள் நவம்பர் ஒன்றாம் தேதி மாலை லட்சுமி குபேரர் பூஜையை செய்யலாம். இந்த முறை தீபாவளிக்கு மறுநாள் கேதார கௌரி விரதம் நிகழ்கிறது. இந்த கேதார கௌரி விரதத்தை அனுசரிக்காதவர்கள் நவம்பர் ஒன்றாம் தேதியும் வழிபாடு செய்யலாம். அவரவர் வசதிக்கேற்ப தீபாவளி அன்றோ அல்லது அதற்கு மறுநாளோ லட்சுமி குபேரர் பூஜையை செய்யலாம்.
இந்த லட்சுமி குபேரர் பூஜை செய்வதற்கு மகாலட்சுமி படம் குபேரர் படம் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம். தற்போது லட்சுமி குபேரர் மற்றும் குபேரர் மனைவியோடு சேர்ந்து இருப்பது போல் படமும் கிடைக்கிறது. இது தவிர குங்குமம் ஒரு ரூபாய் ஐந்து ரூபாய் போன்ற நாணயங்கள் 108 எடுத்துக் கொள்ளுங்கள். தாமரை மலர் கிடைத்தால் நல்லது இல்லையென்றால் வாசனை மிகுந்த மலர்கள் துளசி அட்சதை, வாழைப்பழம் வெற்றிலை பாக்கு ஆகியவற்றை பயன்படுத்தலாம். அவலால் செய்த ஏதாவது ஒரு பதார்த்தத்தை நெய்வேத்தியமாக படைத்து வழிபடலாம்.

லட்சுமி குபேரர் பூஜை செய்யும் முறையானது ஒரு மனைப்பலகையில் சிறிதாக கோலம் போட்டு அதில் லட்சுமி குபேரர் படங்களில் வைக்கலாம். சிலர் சிலையாகவும் வைப்பார்கள். குபேரர்க்கு உரிய திசை வடக்கு என்பதால் குபேரர் படத்தை வடக்கு நோக்கி இருக்கும்படி வைக்க வேண்டும். படையலுக்கு போடுவதற்கு முன்பு அந்த இடத்தில் குபேர எந்திரத்தை வரைந்து கொள்ள வேண்டும். குல தெய்வத்தை வணங்கி விட்டு மகாலட்சுமியை 108 போற்றிகளை சொல்லி பூஜை செய்யலாம். இந்த 108 போற்றிகளை சொல்லும்போது நாணயங்களை ஒன்று ஒன்றாக தட்டில் போடலாம். இந்த சில்லறை சத்தம் குபேரருக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். இது பணத்தை ஈர்க்கும். நல்ல விஷயங்கள் நடைபெற வேண்டும் பண வரவு தடை இன்றி இருக்க வேண்டும் தொழில் முன்னேற வேண்டும் என்று மனதார வேண்டிக் கொண்டால் லக்ஷ்மியும் குபேரரும் இணைந்து நமக்கு அருளாசி புரிவார்கள்.
