இந்தியாவில் பல வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள் இருக்கிறது. இந்தியாவை ஆண்ட பல மன்னர்கள் பேரரசுகள் தங்கள் பெயர் சொல்லும் அளவிற்கு அரண்மனைகள் கோட்டைகள் போன்றவற்றை கட்டிவிட்டு நினைவு சின்னங்களாக வைத்து சென்றிருக்கின்றனர். அப்படி கேரளாவில் அமைந்திருக்கும் ஒரு வரலாற்று சிறப்புமிக்க அரண்மனை தான் மட்டஞ்சேரி அரண்மனை. இதன் வரலாறு என்ன என்பதை பற்றி இனி காண்போம்.

மட்டஞ்சேரி அரண்மனை டச் அரண்மனை என்று பிரபலமாக அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் கேரளாவில் உள்ள கொச்சியில் அமைந்திருக்கும் அரண்மனை ஆகும். போர்த்துக்கீசிய பேரரசர்களால் 1545 ஆம் ஆண்டு கட்டப்பட்டு கொச்சி மன்னருக்கு பரிசாக கொடுக்கப்பட்டது.
இந்த அரண்மனை நாலு கட்டு பாணியில் கட்டப்பட்ட ஒரு நாற்கர அமைப்பாகும். பாரம்பரிய கேரள கட்டடக்கலை பாணியில் இது கட்டப்பட்டிருக்கிறது. நடுவில் முற்றம் உள்ளது. இந்த மட்டஞ்சேரி அரண்மனையின் சுவர்களில் ஏராளமான சுவர் ஓவியங்கள் இருக்கின்றன. கொச்சியை ஆண்ட ராஜாக்களின் உருவப்படங்கள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கிறது.

மட்டஞ்சேரி அரண்மனையின் உச்சவரம்பு மரக்கட்டைகளில் மலர் வடிவமைப்புகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. ராஜாக்களின் உருவப்படங்கள் மட்டுமல்லாது பல்லக்கு, அரசகுடைகள், அரச குடும்பத்தினர் பயன்படுத்திய உடைகள், நாணயங்கள், முத்திரைகள் போன்றவை இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கிறது. 1951 ஆம் ஆண்டில் இந்த அரண்மனை மத்திய அரசின் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. இந்திய தொல்லியல் துறையால் மட்டஞ்சேரி அரண்மனை சமீபத்தில் மறுசீரமைப்பு செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.
