இந்தியாவில் பல வரலாறு சிறப்புமிக்க இடங்கள் இருக்கின்றன. அதுபோல தமிழ்நாட்டிலும் பல சிறப்பு வாய்ந்த இடங்கள் இருக்கிறது. அது பலருக்கும் தெரியாமல் இருக்கிறது. அப்படி ஒரு இடம்தான் குடியம் குகைகள். திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் இந்த குடியம் குகைகளின் வரலாறு என்ன என்பதை பற்றி இனி காண்போம்.
குடியம் குகைகள் தென்னிந்தியாவில் உள்ள பாறை தங்குமிடங்கள் மற்றும் வரலாற்றுக்கு முந்திய கல் கருவிகள் மற்றும் கலாச்சாரத்துக்கு பெயர் பெற்றவை ஆகும். தமிழ்நாட்டின் சென்னையிலிருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் திருவள்ளூர் மாவட்டத்தில் பூண்டி நீர் தேக்கத்திற்கு அருகில் அமைந்திருக்கிறது. இந்த குடியம் குகைகள் பழங்கால கற்கால மனிதனால் பயன்படுத்தப்பட்டதாக தொல்லியல் சான்றுகள் தெரிவிக்கின்றன.
இந்த குடியம் குகைகளை 1963 மற்றும் 64 ஆம் ஆண்டுகளில் இந்திய தொல்லியல் துறையில் அகழ்வாராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆய்வுகளில் 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பழைய கற்கால மனிதன் பயன்படுத்திய வாழ்விடம் தான் இந்த குகைகள் என்று கூறுகிறார்கள். இது மட்டுமல்லாமல் பூண்டிக்கு அருகில் உள்ள அல்லிக்குழி மலை தொடர்களிலும் இந்திய தொல்லியல் துறைகள் இந்த குகைகள் போன்று 16 தங்கும் இடங்கள் அடையாளம் காணப்பட்டு இருக்கின்றன.
இந்த குடியம் குகைகளில் கற்கால மனிதர்கள் வாழ்ந்ததுக்கு மற்றொரு சான்றாக கூறப்படுவது கற்கருவிகள் இந்த இடத்தில் இருந்து எடுத்திருக்கிறார்கள். குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்று சொல்லப்படுவது போல அந்த பரிணாமத்தின் தொடக்க நிலையில் இருந்த மனிதர்கள் இந்த குகையில் வாழ்ந்திருக்கிறார்கள் என்று ஆராய்ச்சியில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உலகின் மிக பழமையான இடங்களில் இந்த குடியம் குகைகள் ஒன்றாக கருதப்படுகிறது.