தொலைபேசி இணையம் வருவதற்கு முன்பு ஒருவருக்கு ஒருவர் தூரத்தில் இருப்பவர்கள் பேசிக்கொள்ள உதவியது தான் கடிதங்கள். பலருடைய சந்தோஷங்களையும் சோகங்களையும் தாங்கி சென்றது கடிதங்கள் தான். அதனால் இந்த தபால்களை பரிமாறுவதற்கான தபால் நிலையங்கள் உருவாக்கப்பட்டன. எல்லாவற்றிலும் வினோதமாக மிதக்கும் தபால் நிலையம் ஒன்று இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? உலகிலேயே இந்தியாவில் மட்டும் தான் இது இருக்கிறது. அது எங்கே இருக்கிறது அதன் வரலாறு என்ன என்பதைப் பற்றி இனி காண்போம்.

இந்தியாவில் பல அழகான வித்தியாசமான இடங்கள் இருக்கின்றது. இயற்கை அழகுடன் இருக்கும் காஷ்மீரில் மலைகள் வண்ணமயமான ஏரிகள் பனி உடைய சிகரங்கள் இருக்கும். அதே காஷ்மீரில் தான் மிதக்கும் தபால் நிலையமும் அமைந்திருக்கிறது. பழமை வாய்ந்த இந்த தபால் நிலையம் பல சுற்றுலா பயணிகளையும் ஈர்க்கிறது.
காஷ்மீரின் அழகிய நகரமான ஸ்ரீ நகரில் டால் ஏரியில் ஒரு பெரிய படகில் நடுவில் இந்த மிதக்கும் தபால் நிலையம் அமைந்திருக்கிறது. இங்கு தங்களது அன்புக்குரியவர்களுக்கு தபால் அனுப்ப வரும் பயணிகள் எண்ணிக்கை ஏராளமானதாகும். பழமை வாய்ந்த இந்த மிதக்கும் தபால் நிலையம் பிரிட்டானிய அரசு இருக்கும்போதே துவங்கப்பட்டிருக்கிறது. ஆனால் 2011 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அப்போதைய முதலமைச்சராக இருந்த உமர் அப்துல்லா இந்த மிதக்கும் தபால் அலுவலகத்தை புதுப்பித்து மீண்டும் திறந்தார்.

இது செயலில் உள்ள தபால் நிலையம் ஆகும். இங்கு உள்ளூர் வாசிகள் மட்டுமல்லாமல் சுற்றுலா பயணிகளும் ஆர்வமுடன் வந்து இதை கண்டு ரசித்து செல்கின்றனர். இணைய வசதி மற்றும் சர்வதேச தொலைபேசி அழைப்பு போன்ற சேவைகளும் இங்கு செயல்பட்டு வருகிறது. கூடுதலாக இந்த மிதக்கும் தபால் அலுவலகத்தில் ஒரு தபால் தலை அருங்காட்சியமும் உள்ளது. தனித்துவமான முத்திரைகளின் பெரிய தொகுப்பை இது கொண்டிருக்கிறது. நீங்கள் காஷ்மீர் ஸ்ரீ நகருக்கு சென்றால் மிதக்கும் தபால் நிலையத்திலிருந்து அன்புக்குரியவர்களுக்கு தபாலை அனுப்புங்கள். அது என்றைக்கும் வாழ்நாளில் மறவாத அனுபவமாக இருக்கும்.
