தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மதுராந்தகம் பகுதியில் நடைபெற்ற வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது திமுகவையும், உதயநிதி ஸ்டாலினையும் அவர் மிகக் கடுமையாக விமர்சித்தார். மு.க. ஸ்டாலினின் மகன் என்ற ஒரே காரணத்திற்காகவே உதயநிதி அரசியலுக்கு வந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தவெகவின் நிர்வாகிகள் தங்களைப் போல அடிமட்டத்திலிருந்து உழைத்து மேலே வந்தவர்கள் என்றும், நேரடி வாரிசாக வந்து அரசியல் புரிதல் இல்லாமல் தவெகவைப் பார்த்து கிண்டல் செய்வதாகச் சாடினார்.
அரசியல் பின்னணியோ அல்லது பெரும் பண பலமோ இல்லாத சாமானியர்களைத் தேடிக் கண்டுபிடித்துத் தலைவர் விஜய் சட்டமன்ற உறுப்பினர்களாக உயர்த்தியுள்ளார் என்று ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார். 1967-ல் பேரறிஞர் அண்ணா செய்ததைப் போல, மக்கள் ஆதரவோடு தலைவர் விஜய்யின் ஒரே முகத்தை மட்டுமே வைத்து அக்கட்சி வளர்ந்து நிற்கிறது என்றார். ஆரம்பத்தில் தங்களை ‘ரீல்ஸ் கட்சி’ என்றும் ‘வாட்ஸ்அப் கட்சி’ என்றும் ஏளனம் செய்தவர்கள் மத்தியில், தங்கள் ஆட்சியில் ஊழல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளதாகக் பெருமிதத்துடன் குறிப்பிட்ட அவர், திமுக ஆட்சியில் நிலவிய கமிஷன் மற்றும் பர்சன்டேஜ் கலாச்சாரம் தற்போது இல்லை என்றும் கூறினார்.
மேலும் திமுகவின் தேர்தல் அணுகுமுறையைக் கடுமையாக விமர்சித்த அவர், இடைத்தேர்தல்களில் வாக்காளர்களுக்கு ரூ. 5,000 வரை பணம் இறைப்பதே அவர்களின் அரசியல் பாணி என்றார். எ.வ. வேலு மற்றும் நேரு போன்ற முன்னாள் அமைச்சர்கள் பூத் வாரியாகப் பணத்தைக் கொண்டு சேர்ப்பார்கள் என்று குற்றம் சாட்டிய அவர், வரவிருக்கும் தேர்தலில் திமுக வாக்கிற்குப் பணம் கொடுத்தாலும் மக்கள் அதைத் தீபாவளிச் செலவுக்கான பணமாகப் பெற்றுக்கொண்டு, வாக்கினைத் தமிழக வெற்றிக் கழகத்திற்கே அளிப்பார்கள் என்றும், இதனால் திமுக டெபாசிட் கூடப் பெற முடியாது என்றும் உறுதியாகத் தெரிவித்தார்.
இறுதியாக, மதுராந்தகத்தின் தலித் காலனிகள் மற்றும் வன்னிய மக்கள் வாழும் பகுதிகளில் நிலவும் உள்கட்டமைப்புச் சிக்கல்கள் குறித்துப் பேசிய ஆதவ் அர்ஜுனா, அப்பகுதிகளில் சாலை, குடிநீர் மற்றும் மருத்துவமனை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் உடனடியாக நிறைவேற்றித் தரப்படும் என மக்களுக்கு உறுதி அளித்தார். திமுகவின் பண பலத்தை மீறி, மக்களின் அன்பையும் நம்பிக்கையையும் மட்டுமே மூலதனமாகக் கொண்டு தவெக பெரும் வெற்றி பெறும் என்று தனது உரையில் அவர் சுட்டிக்காட்டினார்.
