செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே காந்தி நகரில் வாடகைக்கு தங்கி, ஒரகடம் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் பணியாற்றி வந்த தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 27 வயது இளம்பெண் நதியா, மன உளைச்சல் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக இப்பகுதியில் வசித்து வந்த நதியா, உடன் தங்கியிருந்த தோழி ஊருக்குச் சென்றதால் ஏற்பட்ட தனிமையாலும், தான் அனாதையாக வாழ்வதாக உணர்ந்த மன அழுத்தத்தினாலும் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது. வெகுநேரமாகியும் நதியா தொலைபேசியை எடுக்காததால் சந்தேகமடைந்த அவரது தோழி, வீட்டின் உரிமையாளருக்குத் தகவல் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, நதியா மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
தகவலறிந்து வந்த மறைமலைநகர் போலீசார், உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், நதியா எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதம் ஒன்று சிக்கியுள்ளது. அதில், கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் 15-ம் தேதி தனது தாய் இறந்த அதே நினைவு நாளிலேயே தானும் உயிரிழக்க விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தாயின் பிரிவைத் தாங்க முடியாமலும், தனிமைத் துயரினாலும் அவர் தற்கொலை செய்து கொண்டது உறுதியாகியுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
