சமூக ஊடகங்களில் தினமும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் பகிரப்பட்டு வருகின்றன. அவற்றில் சில நம்மை சிரிக்க வைப்பதாகவும், சில ஆச்சரியப்படுத்துவதாகவும் இருக்கும். ஆனால், ஆபத்தான ஸ்டண்ட்கள் மற்றும் விபத்துக்கள் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி விடுகின்றன. அந்த வகையில், தற்போது எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டுள்ள ஒரு வீடியோ, பார்ப்பவர்களின் நெஞ்சை பதறவைக்கும் வகையில் அமைந்துள்ளது. ஒரு சிறிய கவனக்குறைவு அல்லது அலட்சியம் எப்படி ஒருவரின் உயிருக்கே ஆபத்தாக முடியும் என்பதை இந்த வீடியோ உணர்த்துகிறது.
அந்த வீடியோவில், ஒரு கட்டடத்தின் கூரையின் விளிம்பில் நிற்கும் இளைஞர் ஒருவர், மற்றொரு கட்டடத்தின் பால்கனியில் நிற்கும் தன் நண்பனை நோக்கி கையை நீட்டுகிறார். கையைப் பிடித்துக் கொண்டு ஒரு கட்டடத்திலிருந்து மற்றொரு கட்டடத்திற்கு எளிதாகத் தாவிவிடலாம் என்று அவர்கள் நினைத்ததாகத் தெரிகிறது. ஆனால், நிஜ வாழ்க்கை என்பது சினிமா படங்களைப் போன்றது அல்ல. ஒரு மனிதனின் முழு எடையும் ஒரே ஒரு கையின் பிடியை மட்டும் நம்பி தாங்குவது என்பது நடைமுறையில் சாத்தியமற்ற ஒன்று.
நண்பனின் கையைப் பிடித்துக்கொண்டு அந்த இளைஞர் தாவிச் செல்ல முயன்ற அடுத்த நொடியே, அவருடைய முழு உடலின் எடையும் நண்பனின் கைக்கு மாறுகிறது. சில நொடிகள் இருவரும் தங்களைச் சமாளிக்க முயன்ற போதிலும், பிடி நழுவி அந்த இளைஞர் நேராகக் கீழே விழுகிறார். பார்ப்பவர்களை உரைய வைக்கும் இந்த விபத்தில், அதிர்ஷ்டவசமாக அந்த இளைஞருக்குக் கடுமையான காயங்கள் எதுவும் ஏற்படாமல் உயிர் தப்பியதாகக் கூறப்படுகிறது. சில நொடிகளை மிச்சப்படுத்த அல்லது குறுக்கு வழியைப் பயன்படுத்த நினைத்து, இப்படி உயிரைப் பணயம் வைப்பது புத்திசாலித்தனமல்ல என்று இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
