குஜராத் மாநிலம் சூரத் நகரில் வாலிபர் ஒருவர் எந்தவொரு பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி, வெறும் கைகளால் பாம்பைப் பிடிக்க முயன்றபோது, அந்தப் பாம்பு அவரைத் தாக்கி கடித்த அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. ஒரு வீட்டின் உள்ளே புகுந்த பாம்பை வெளியேற்ற சச்சின் என்ற வாலிபர் மிகுந்த தன்னம்பிக்கையுடன் முயன்றார். அப்போது அங்கிருந்தவர்கள் தங்களின் மொபைல் போன்களில் இந்த ஒட்டுமொத்த சம்பவத்தையும் வீடியோவாகப் பதிவு செய்தனர்.
தொடக்கத்தில் அந்த வாலிபர் பாம்பை எளிதாகக் கட்டுப்படுத்திவிடுவார் என்று தோன்றினாலும், அடுத்த சில வினாடிகளில் நிலைமை தலைகீழாக மாறியது. பாம்பைப் பிடித்து அவர் வெளியே கொண்டு செல்ல முயன்றபோது, அது திடீரென ஆக்ரோஷமடைந்து வாலிபரை நோக்கித் திரும்பத் திரும்பப் பாய்ந்து தாக்கியது. எதிர்பாராத இந்தத் தாக்குதலால் பதற்றமடைந்த வாலிபர் நிலைதடுமாறிய நிலையில், பாம்பு அவரது கையை ஆழமாகக் கடித்தது. இதனால் பயந்துபோன அவர் பாம்பை அங்கேயே விட்டுவிட்டு அலறியடித்துக்கொண்டு ஓடினார்.
அதிர்ஷ்டவசமாக, அந்த வாலிபரைக் கடித்த பாம்பு ‘சாரைப்பாம்பு’ (Rat Snake) வகையைச் சேர்ந்தது என்பதால் அதில் விஷம் இல்லை. இதன் காரணமாக வாலிபரின் உயிருக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. இருப்பினும், விஷமில்லாத பாம்பாக இருந்தாலும் அதன் கடி கடுமையான காயம், வீக்கம் அல்லது தொற்றுநோயை ஏற்படுத்தக்கூடும் என்பதால், இதுபோன்ற சூழல்களில் உடனடியாக மருத்துவப் பரிசோதனை செய்துகொள்வது அவசியம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். சமூக வலைதளங்களில் தற்போதைய ட்ரெண்டிங்காக மாறியுள்ள இந்த வீடியோ, உரியப் பாதுகாப்பு இல்லாமல் வனவிலங்குகளைக் கையாள்வது எவ்வளவு ஆபத்தானது என்பதை மக்களுக்கு உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது.
