மத்தியப் பிரதேசத்தில் மாசடைந்த அஜ்நார் நதியைத் தனி ஆளாகத் தூய்மைப்படுத்தி வரும் 21 வயது இளைஞர் ‘பிட்டு தபாஹி’, ஆற்று நீரின் மாசுகாரணமாகக் கடுமையான தோல் நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள போதிலும், தனது லட்சியத்தைக் கைவிடாமல் தொடர்ந்து போராடி வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சுரேந்திர சிங் சௌத்ரி என்ற 21 வயது மாணவர், ‘பிட்டு தபாஹி’ என்ற பெயரில் சமூக வலைதளங்களில் அறியப்படுபவர். கடந்த ஜனவரி 26 முதல், அப்பகுதியில் உள்ள மாசடைந்த அஜ்நார் நதியில் குவிந்திருந்த பிளாட்டிகுக் குப்பைகள், பாட்டில்கள் மற்றும் பாசிகளைத் தனது சொந்த முயற்சியில் அகற்றி வந்தார். அவரது தூய்மைப் பணிகள் சமூக வலைதளங்களில் வைரலாகிப் பெரும் பாராட்டைப் பெற்றன.
ஆனால், பல மாதங்களாகத் தொடர்ந்து மாசடைந்த ஆற்று நீரில் இறங்கிப் பணிபுரிந்ததன் காரணமாக அவரது உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கை மற்றும் கால்களில் கடுமையான தோல் அரிப்பு, ஒவ்வாமை மற்றும் வலியால் அவர் அவதிப்பட்டு வருகிறார். தினமும் இரவு தூங்குவதற்கு முன்பு வலி நிவாரணி மற்றும் தோல் நோய் மாத்திரைகளை உட்கொண்டால்தான் அடுத்த நாள் காலையில் எழுந்து நதிக்குச் சென்று தனது பணியைத் தொடர முடியும் என்ற கடினமான சூழ்நிலையில் அவர் உள்ளார்.
பெற்றோர் தடுத்தாலும், தான் நேசிக்கும் நதி மீண்டும் குப்பைக் காடாக மாறுவதைத் தாங்க முடியாமல், மக்கள் குப்பைகளைக் கொட்ட வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தவாறே அவர் தனது சமுதாயப் பணியைத் தொடர்வது நெட்டிசன்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
