சமூக ஊடகங்களில் தினமும் பலவிதமான வீடியோக்கள் உலா வந்தாலும், சில வீடியோக்கள் மட்டுமே மனிதநேயத்தையும் அன்பையும் பறைசாற்றி மக்களின் இதயங்களை வெல்கின்றன. அந்த வகையில், தற்போது எக்ஸ் தளத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு சிறிய சிறுமி தாகத்தோடு தவிக்கும் பசு மாடு ஒன்றிற்கு கை பம்ப் மூலம் தண்ணீர் அடித்துக் கொடுத்து உதவும் காட்சி அனைவரையும் நெகிழச் செய்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பல மில்லியன் மக்களின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
அந்த வீடியோவில், கடுமையான வெயிலின் காரணமாக தாகத்துடன் ஒரு பசு மாடு கை பம்பின் அருகே வந்து நிற்கிறது. மாட்டின் தேவையை உடனடியாகப் புரிந்துகொண்ட அந்தச் சிறுமி, சிறிதும் சளைக்காமல் பம்பின் கைப்பிடியைப் பிடித்துத் தொடர்ந்து தண்ணீர் அடிக்கத் தொடங்குகிறாள். பசு மாடும் பம்பின் வாய் பகுதிக்கு மிக அருகில் தன் வாயை வைத்துக்கொண்டு, சிறுமி அடிக்கும் தண்ணீரை மிகவும் ஆவலோடு குடித்துத் தன் தாகத்தைத் தணித்துக் கொள்கிறது. சிறுமியின் இந்த அக்கறையான செயல் காண்போரை நெகிழ வைக்கிறது.
இந்தக் காணொளி எந்த இடத்தில் எடுக்கப்பட்டது என்ற விவரங்கள் தெரியவில்லை என்றாலும், வாயில்லா ஜீவனின் துயரறிந்து உதவிய அந்தச் சிறுமியின் செயலை இணையவாசிகள் பெரிதும் பாராட்டி வருகின்றனர். சமுதாயத்தில் நேர்மறை எண்ணங்களை விதைக்கும் இது போன்ற வீடியோக்கள் அதிகம் பகிரப்பட வேண்டும் என்றும், அந்தச் சிறுமிக்குச் சிறு வயதிலேயே நல்ல பண்புகளையும் மனிதநேயத்தையும் கற்றுக்கொடுத்த அவளது பெற்றோரின் வளர்ப்பிற்குப் பாராட்டுக்கள் என்றும் நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
