“விஜய் மாமா நீங்களாவது வந்து பாருங்க”… கர்நாடகாவில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழரின் மகள் நெஞ்சை உலுக்கும் கதறல்… விஜய்யை உதவிக்கு அழைக்கும் சிறுமி…!!

By Gayathri on ஆவணி 23, 2026

Spread the love

கர்நாடக வனத்துறையினரின் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியான டேவிட் குமார் என்பவரின் மகள் பெஸ்ஸி, தமிழக முதல்வர் திரு. விஜய்க்கு உருக்கமான கோரிக்கை ஒன்றை காணொளி வாயிலாக முன்வைத்துள்ளார். தனது தந்தை உயிருடன் இருந்தவரை தான் கேட்ட அனைத்தையும் ஆசையாக வாங்கிக் கொடுத்தார் என்றும், தற்போது அவர் இல்லாததால் தங்களின் அன்றாடத் தேவைகளை யார் பூர்த்தி செய்வார்கள் என்ற பெருங்கவலையில் இருப்பதாகவும் அந்தச் சிறுமி தெரிவித்துள்ளார். மேலும், அக்கம் பக்கத்தினர் புதிய வீடுகள் கட்டுவதைப் பார்த்து, தாங்களும் ஆசைப்பட்டதால் தனது தந்தை பெரும் கடன் வாங்கி ஒரு வீட்டைக் கட்டியதாகவும், தற்போது அவரை இழந்து தவிக்கும் நிலையில் அந்தக் கடனை எப்படித் திருப்பிச் செலுத்துவது என்ற அச்சத்தில் தங்கள் குடும்பம் தத்தளிப்பதாகவும் அவர் வேதனைப்பட்டுள்ளார்.

தான் நன்றாகப் படித்து எதிர்காலத்தில் ஒரு மாவட்ட ஆட்சியராக வர வேண்டும் என்பதே தனது தந்தையின் ஆசை என்று கூறியுள்ள பெஸ்ஸி, தற்போதைய ஆதரவற்ற சூழ்நிலையில் தனது கல்வியை எவ்வாறு தொடரப் போகிறேன் என்ற குழப்பத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். இந்தத் துயரமான நேரத்தில் தங்களுக்கு ஆறுதல் கூறவோ, நேரில் பார்வையிடவோ இதுவரை எந்தத் தலைவர்களோ அல்லது அதிகாரிகளோ முன்வரவில்லை என்று வருந்திய அந்தச் சிறுமி, ‘விஜய் மாமா, நீங்களாவது நேரில் வந்து எங்களின் இந்த ஆதரவற்ற நிலையைக் காண வேண்டும்’ என மிகவும் கண்ணீருடன் அழைப்பு விடுத்துள்ளார்.