தேயிலை தோட்டத்தில் வேலை பார்த்த பெண்ணுக்கு டெல்லியில் இருந்து வந்த சர்ப்ரைஸ்…! யார் இந்த இந்திராணி…?

By Devi Ramu on தை 12, 2026

Spread the love

நீலகிரி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்த சாதாரணத் தேயிலைத் தோட்டத் தொழிலாளியான இந்திராணிக்கு, டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் பங்கேற்கக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடமிருந்து நேரடி அழைப்பு வந்துள்ளது. கணவரை இழந்த நிலையில் நான்கு பிள்ளைகளை வளர்த்து வரும் இந்திராணி, கூலி வேலை செய்து கொண்டே மத்திய அரசின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பயன் பெற்றவர். தபால் துறை அதிகாரிகள் நேரில் சென்று தேயிலைத் தோட்டத்திலேயே அவரிடம் இந்த அழைப்பிதழை வழங்கியபோது, அந்தப் பகுதியே ஆச்சரியத்தில் மூழ்கியது.

எந்தவொரு பெரிய பின்னணியும் இல்லாத சாமானிய உழைப்பாளியான தனக்கு, நாட்டின் மிகப்பெரிய விழாவில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்ததை எண்ணி இந்திராணி நெகிழ்ந்து போயுள்ளார். உழைப்பிற்கு மதிப்பளிக்கும் வகையில் அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கை, கூடலூர் பகுதி மக்களிடையே பெரும் மகிழ்ச்சியையும் பெருமையையும் ஏற்படுத்தியுள்ளது. வரும் ஜனவரி 26-ம் தேதி டெல்லி செல்லும் இந்திராணி, அங்குள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் சிறப்பு விருந்திலும் கலந்து கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.