கணவருடன் ஏற்பட்ட தகராறில் வீட்டைவிட்டு வெளியேறிய பெண் ஒருவர், போபால் நகரில் போலித் திருமணக் கும்பலுடன் இணைந்து வெறும் 7 மாதங்களுக்குள் 25 ஆண்களைத் திருமணம் செய்து ஏமாற்றிய அதிர்ச்சிச் சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
அனுராதா பாஸ்வான் என்ற பெண் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றி வந்த நிலையில், குடும்பத் தகராறு காரணமாக போபாலுக்குத் தப்பியோடியுள்ளார். அங்கு சில நபர்களுடன் சேர்ந்து கொண்டு போலித் திருமண மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். இக்கும்பல் ஏமாளியான ஆண்களைத் தேடிக் கண்டுபிடித்து அனுராதாவுக்குத் திருமணம் செய்து வைத்துள்ளனர்.
திருமணமான முதல் நாளிலேயே வீட்டில் இருந்த தங்கம், நகை, பணம் மற்றும் செல்போன்களைத் திருடிக்கொண்டு அவர் தலைமறைவாகி விடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார். இவ்வாறாக வெறும் 7 மாத கால இடைவெளியில் 25 ஆண்களைத் திருமணம் செய்து பல லட்சக்கணக்கில் பணம் மற்றும் நகைகளைக் கொள்ளையடித்த இந்த மோசடி வழக்கில் அவர் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் ஆண்கள் மத்தியில் பெரும் பீதியையும் இணையத்தில் கடும் விவாதங்களையும் தோற்றுவித்துள்ளது.
