கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில், நள்ளிரவில் ஒரு பெண் வீடு வீடாகச் சென்று கதவைத் தட்டி உதவி கேட்டு கூச்சலிட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வேகமாகப் பரவிய நிலையில், அது குறித்துப் போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.
நேற்று முன்தினம் அதிகாலை 2 மணியளவில், பர்கூரில் இருந்து ஜெகதேவி செல்லும் சாலையில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஒரு பெண், வீடுகளுக்குள் நுழைய முயற்சி செய்து, தரையில் விழுந்து அடிபட்டதால் உதவி செய்யுமாறு கூச்சலிட்டுள்ளார். அவர் கதவுகளைத் தட்டியதுடன், அங்கிருந்த பொருட்களை எடுத்துச் சத்தம் எழுப்பியதாலும், வீட்டின் உரிமையாளர்கள் யாரும் கதவைத் திறக்கவில்லை. இந்தப் பெண் திருட வந்தாரா அல்லது உண்மையாகவே உதவி கேட்டாரா எனப் பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், அந்தப் பெண் கிருஷ்ணகிரி மாவட்டம், மிட்ட அள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. நவம்பர் 20ஆம் தேதி இரவு அந்தப் பெண்ணுக்கும் அவரது கணவர் மற்றும் உறவினர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, அவர்கள் தாக்கியதில் காயம் அடைந்துள்ளார். இதனால், நள்ளிரவில் அவர் பர்கூர் அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.
மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் தண்ணீர் தாகம் எடுத்த காரணத்தினால், பர்கூர் எம்ஜிஆர் நகர் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள வீடுகளின் கதவுகளைத் தட்டி உதவி கேட்டுள்ளார். மக்கள் உதவாத நிலையில், அவர் பர்கூர் அரசு மருத்துவமனைக்குச் சென்று முதலுதவி சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காகக் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது சம்பந்தமாகக் கந்திகுப்பம் காவல் நிலையத்தில் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த வீடியோ குறித்து உண்மைக்குப் புறம்பான செய்திகளைப் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்டக் காவல்துறை எச்சரித்துள்ளது.
