மத்தியப் பிரதேச மாநிலம் சத்தார்பூர் பகுதியில் உள்ள மருத்துவமனையில், பெண் ஒருவருக்கு நான்கு கைகள் மற்றும் நான்கு கால்களுடன் கூடிய குழந்தை பிறந்துள்ளது அப்பகுதியில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. உடலமைப்பில் கூடுதல் உறுப்புகளுடன் பிறந்த இந்த அரிய குழந்தையைக் காண மருத்துவமனையில் பொதுமக்கள் ஆர்வத்துடன் கூடினர். இத்தகைய அசாதாரண பிறப்பால் குடும்பத்தினர் வியப்பும் அதிர்ச்சியும் அடைந்துள்ள நிலையில், தாயும் குழந்தையும் தற்போது மருத்துவர்களின் நேரடிக் கண்காணிப்பில் தீவிர பராமரிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
மருத்துவ ரீதியாக இது மிகவும் அரிய நிகழ்வாகும்; தாயின் கருப்பையில் இரட்டைக் கருக்கள் உருவாகத் தொடங்கும்போது, ஒன்று முழுமையாக வளர்ச்சியடையாமல் மற்றொரு கருவுடன் பகுதி அளவில் இணைந்து விடுவதே இந்நிலைக்குக் காரணம் என மருத்துவர்கள் விளக்குகின்றனர். ‘பாராசிடிக் ட்வின்ஸ்’ எனப்படும் இந்த சிக்கலான நிலை, மரபணு மாறுபாடுகள் அல்லது கரு வளர்ச்சியில் ஏற்படும் குறைபாடுகளால் நிகழ்கிறது. குழந்தையின் முக்கிய உடல் உறுப்புகளின் செயல்பாடுகளை விரிவாகப் பரிசோதித்த பின்னரே, கூடுதல் உறுப்புகளை அறுவை சிகிச்சை மூலம் பாதுகாப்பாக அகற்ற முடியுமா என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் மருத்துவக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
