உத்தரகண்ட் மாநிலம் கேதார்நாத் யாத்திரை முடித்துவிட்டு கணவருடன் ரயிலில் திரும்பிக்கொண்டிருந்த 29 வயது பெண் மர்மமான முறையில் காணாமல் போன நிலையில், 6 நாட்களுக்குப் பிறகு பீகாரின் பெகுசராய் பகுதியில் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். டெல்லியைச் சேர்ந்த ஷாலினி என்ற அந்தப் பெண், தனது கணவர் நவீனுடன் நந்தா தேவி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தபோது, முசாபர்நகர் ரயில் நிலையம் அருகே அதிகாலையில் திடீரென மாயமானார்.
பெண் மாயமான புகாரைத் தொடர்ந்து, ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) மற்றும் உள்ளூர் காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சிசிடிவி கேமரா காட்சிகள் மற்றும் செல்போன் சிக்னல்களை ஆய்வு செய்ததில், அவர் பீகார் நோக்கிச் சென்றது தெரியவந்தது. இதற்கிடையில், அந்தப் பெண் வழிதவறி அல்லது கடத்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டன.
காணாமல் போன 6 நாட்களுக்குப் பிறகு, பீகார் மாநிலம் பெகுசராய் பகுதியில் அந்தப் பெண் பாதுகாப்பாக மீட்கப்பட்டார். அவர் எப்படி அங்கு சென்றார் என்பது குறித்த முழுமையான விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை என்றாலும், அவர் தற்போது நலமுடன் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர். விசாரணையின் ஆரம்பக்கட்ட தகவல்களின்படி, அவர் தவறான ரயிலில் ஏறி பீகாருக்குச் சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. தற்போது அவர் தனது குடும்பத்தினருடன் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
