பீகார் மாநிலம் பாட்னா உயிரியல் பூங்காவில் உள்ள வெள்ளை புலி ஒன்றின் பரிதாப நிலை குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், வெள்ளை புலி ஒன்று மிகவும் மெலிந்து, எலும்புகள் துருத்திக் கொண்டு, நடக்கக் கூட தெம்பில்லாமல் தள்ளாடியபடி காட்சியளிக்கிறது. இதைப் பார்த்த பார்வையாளர் ஒருவர், “இதன் எலும்புகள் எல்லாம் வெளியே தெரிகின்றன, இது மிகவும் மோசமான நிலையில் உள்ளது” என்று ஆதங்கத்துடன் கூறும் குரல் பின்னணியில் கேட்கிறது. இந்த வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, பூங்காவில் உள்ள விலங்குகள் சரியாகப் பராமரிக்கப்படுகின்றனவா என்றும், அவற்றுக்கு முறையான உணவு மற்றும் மருத்துவ வசதிகள் வழங்கப்படுகின்றனவா என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
This is disturbing.
A white tiger at Sanjay Gandhi Biological Park, Patna appears visibly weak in recent footage circulating online.
If this is accurate, it demands immediate attention.
> Visitors allege the animal looks undernourished
> Concerns are being raised about… pic.twitter.com/TDTfoyr4nR— Divya Gandotra Tandon (@divya_gandotra) February 18, 2026
இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ள பாட்னா உயிரியல் பூங்கா நிர்வாகம், அந்த வெள்ளை புலிக்கு வயது மூப்பு தொடர்பான உடல்நலக் கோளாறுகள் இருப்பதாகவும், அதற்குத் தேவையான மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது. இருப்பினும், ஒரு தேசிய விலங்கின் இத்தகைய நலிவடைந்த நிலை வனவிலங்கு ஆர்வலர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. விலங்குகளைக் கூண்டில் அடைத்து வைப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல், அவற்றின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும், இச்சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
