நம் நாடு உள்ளிட்ட பல நாடுகளில் மனிதர்களின் எதிர்காலம், திருமணம் மற்றும் தொழில் குறித்து அறிய ஜோதிடம் பார்க்கும் வழக்கம் உள்ளது. ஆனால், தென்கொரியாவில் மனிதர்களுக்குப் பதிலாகத் தங்களது வளர்ப்பு நாய்களின் உணர்வுகளையும் மனநிலையையும் புரிந்துகொள்வதற்காக ஜோதிடம் பார்க்கும் வித்தியாசமான முறை தற்போது பிரபலமடைந்து இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்நாட்டின் தலைநகர் சியோலில் இதற்கெனத் தனித்துவமான கடைகள் இயங்கி வருகின்றன.
இவ்வித்தியாசமான ஜோதிட முறையில், பல்வேறு குறியீடுகள் மற்றும் படங்கள் கொண்ட அட்டைகள் ஒரு மேஜையின் மீது பரப்பி வைக்கப்படுகின்றன. உரிமையாளர் தனது வளர்ப்பு நாயை அந்த மேஜையின் மீது நிற்க வைக்கும்போது, நாய் தனது காலால் தொடும் அல்லது தேர்வு செய்யும் அட்டையைக் கொண்டு அதன் மனநிலை மற்றும் உடல்நிலை குறித்து ஜோதிடர் விவரிக்கிறார். உதாரணமாக, நாய் வாள் குறியீடு உள்ள அட்டையைத் தொட்டால், அதற்கு மூட்டு வலி அல்லது ஏதேனும் உடல்நலப் பிரச்சினை இருக்கலாம் என விளக்கம் அளிக்கப்படுகிறது.
தங்கள் செல்லப்பிராணிகள் தங்களைப் பற்றி என்ன நினைக்கின்றன, அவற்றைச் சரியாகப் பராமரிக்கிறோமா மற்றும் அவற்றின் தேவைகளைப் புரிந்து கொள்கிறோமா என்பதை அறிந்து கொள்ளவே உரிமையாளர்கள் இச்சேவையை நாடுகின்றனர். மனிதர்களுக்கும் செல்லப்பிராணிகளுக்கும் இடையிலான உணர்வுபூர்வமான பிணைப்பை அடிப்படையாகக் கொண்டு தென்கொரியாவில் உருவாகியுள்ள இந்த “செல்லப்பிராணி ஜோசியம்” பலரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
