சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு பெண் சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கிறார். அப்போது பைக்கில் வரும் ஒரு நபர், அந்தப் பெண்ணைப் பின்தொடர்ந்து சென்று அவரிடமிருந்த பையை திடீரெனப் பறித்துக் கொண்டு தப்பியோட முயல்கிறான். ஆனால், தீய செயல்களுக்கான பலன் உடனடியாகக் கிடைக்கும் என்பதற்கு ஏற்ப, அந்தத் திருடனுக்கு அங்கேயே ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.
பைக் திருடன் பையைப் பறித்துக் கொண்டு தப்பிக்க முயன்ற அதே நொடியில், அந்த வழியே ஒரு கார் வருகிறது. அங்கு நடந்த சம்பவத்தை உடனடியாகப் புரிந்துகொண்ட கார் ஓட்டுநர், சிறிதும் தாமதிக்காமல் தனது காரால் அந்தத் திருடனின் பைக்கின் மீது மோதினார். இதில் நிலைதடுமாறி திருடன் கீழே விழுந்தான். எனினும் அவன் விடாமல் மீண்டும் பைக்கை எடுத்துக்கொண்டு ஓட முயன்ற போது, கார் ஓட்டுநர் இரண்டாவது முறையும் அவனது பைக்கின் மீது மோதி அவனது திட்டத்தைத் தவிடு பொடியாக்குகிறார்.
காரின் தொடர் தாக்குதலால் அதிர்ச்சியடைந்த திருடன், இனி அங்கிருந்து பையுடன் தப்பிப்பது கடினம் என்பதை உணர்ந்தான். இதனால், தான் திருடிய பையை அங்கேயே போட்டுவிட்டு, தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள பைக்கில் வேகமாகத் தப்பியோடினான். கார் ஓட்டுநர் தனது காரை ரிவர்ஸ் கியரில் எடுத்து அவனைக் துரத்திய போதிலும், திருடன் அங்கிருந்து தப்பித்துச் சென்றுவிட்டான். இந்த வீடியோ எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை என்றாலும், கார் ஓட்டுநரின் இந்தச் சமயோசித புத்தியையும் தைரியத்தையும் சமூக வலைத்தளப் பயனர்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
