தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் நகராட்சி உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் விளையாட்டு மற்றும் உடலியல் சார்ந்த செயல்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில், புதிதாக 1,328 உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களும், 297 உடற்கல்வி இயக்குநர் பணியிடங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. கடந்த 2023-2024 ஆம் ஆண்டு பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கையின்போது அறிவிக்கப்பட்டபடி, உடற்கல்வி ஆசிரியர்கள் இல்லாத அனைத்து அரசுப் பள்ளிகளிலும் இப்பணியிடங்களை தோற்றுவிப்பதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையை பள்ளிக் கல்வித் துறையின் செயலர் பி.சந்திரமோகன் வெளியிட்டுள்ளார்.
இந்த புதிய பணியிடங்களை உருவாக்குவதற்காக, பள்ளிக் கல்வி இயக்குநரின் தொகுப்பிலிருந்து ஏற்கனவே இருந்த 275 பட்டதாரி ஆசிரியர் மற்றும் 34 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களும், 555 பட்டதாரி ஆசிரியர் மற்றும் 800 தூய்மைப் பணியாளர் பணியிடங்களும் அரசிடம் சரண் செய்யப்பட்டுள்ளன. இந்த பணியிடங்களுக்கு ஈடாகவே, தற்போது 297 உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-2) பணியிடங்களும், 1,328 உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களும் தோற்றுவிக்கப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 1,328 உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் நேரடி நியமன முறையிலும், 297 உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-2) பணியிடங்கள் 100 சதவீதம் பதவி உயர்வு மூலமாகவும் நிரப்பப்பட உள்ளன. அரசுப் பள்ளிகளில் காலியாகவுள்ள உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பள்ளிக் கல்வி அமைச்சர் ராஜ்மோகன் அண்மையில் தெரிவித்திருந்த நிலையில், இதற்கான நேரடி நியமன அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசாணையின் கல்வித்தகுதி விதிமுறைகளின்படி, உடற்கல்வி ஆசிரியர் பதவிக்கு உடற்கல்வியில் 2 ஆண்டு கால சான்றிதழ் படிப்பு (C.P.Ed) அல்லது டிப்ளமோ (D.P.Ed) அல்லது ஹையர் கிரேடு பெற்றிருக்க வேண்டும். இதனால், முன்பு நடைமுறையில் இருந்தது போல B.P.Ed மற்றும் B.P.E.S பட்டப்படிப்பு படித்தவர்கள் உடற்கல்வி ஆசிரியர் தேர்வுக்கு இனி விண்ணப்பிக்க இயலாது. எனவே, உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-2) பணியிடங்களை முழுமையாக பதவி உயர்வு மூலம் நிரப்புவதற்குப் பதிலாக, 50 சதவீத இடங்களை B.P.Ed, B.P.E.S பட்டதாரிகளைக் கொண்டு நேரடி நியமன முறையில் நிரப்ப வேண்டும் என்று இப்பட்டதாரிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1) பதவிக்கு M.P.Ed பட்டப்படிப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
