கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சினேகா (26) என்ற பெண், அங்குள்ள வயல்வெளியில் அடையாளம் தெரியாத நபர்களால் கொடூரமான முறையில் அடித்துக் கொலை செய்யப்பட்டுச் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். தாய் உயிரிழந்தது கூடப் புரியாமல், அவரது சடலத்தின் மீதே படுத்துக் கொண்டு இரண்டு வயதுக் குழந்தை “அம்மா… அம்மா எந்திரிம்மா…” என அழுதுகொண்டிருந்த நெஞ்சை நடுங்கும் காட்சி காண்போரைக் கண்ணீர் சிந்த வைத்துள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலிஸார், சினேகாவின் உடலைக் கைப்பற்றி முதற்கட்ட விசாரணையைத் தொடங்கினர். சினேகாவின் தலை மற்றும் உடலில் பலத்த காயங்கள் இருந்ததால், அவர் கல்லால் தாக்கப்பட்டுக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனப் போலிஸார் சந்தேகிக்கின்றனர்.
போலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் சினேகாவுக்கு அமித் என்பவருடன் திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது என்றும், அதே நேரத்தில் சினேகாவுக்கு ஷுபம் என்பவருடன் திருமணத்திற்குப் புறம்பான கள்ளத்தொடர்பு இருந்ததாகவும் தெரியவந்துள்ளது. இக்கொடூரக் கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலிஸார், கணவர் அமித் மற்றும் கள்ளக்காதலன் ஷுபம் ஆகிய இருவரையும் உடனடியாகக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
