“சுவீடனில் நான் வாங்கிய பட்டம்… உங்களால் தான்!”.. தமிழக மாணவனின் உருக்கமான பதிவு… மு.க.ஸ்டாலினின் நெகிழ்ச்சியான பதில்…!!!

By Muthu Mani on வைகாசி 16, 2026

Spread the love

தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த, அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்ற மாணவர் ஒருவர், சுவீடன் நாட்டில் உள்ள உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களுள் ஒன்றான KTH ராயல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் (KTH Royal Institute of Technology) தனது முதுகலை (MS) பட்டத்தைப் பெற்றுள்ளார். இந்தச் சாதனை குறித்து அவர் தனது எக்ஸ் (X) சமூக வலைத்தளப் பக்கத்தில் நெகிழ்ச்சியோடு பதிவிட்டுள்ளார். அதில், “எங்கோ தென்காசி மாவட்டத்தின் ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்ற நான், இன்று, சுவீடனில் உலகின் தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்களுள் ஒன்றான KTH-ல் MS பட்டம் பெற்றிருக்கிறேன். இந்தப் பட்டத்தை தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்” என தி.மு.க தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினைக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருந்தார்.

மாணவரின் இந்த நெகிழ்ச்சியான பதிவிற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்திலேயே மிகவும் எதார்த்தமாகவும் பாசத்துடனும் பதில் அளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதில் பதிவில், “எனக்குச் சமர்ப்பிக்கிறேன்னு சொல்றதை விட, உங்க பெற்றோருக்குச் சமர்ப்பிக்கிறதுதான் சரியா இருக்கும்” என்று குறிப்பிட்டு, அந்த மாணவனின் உயர்வுக்குப் பாடுபட்ட பெற்றோரின் தியாகத்திற்கு முதலில் முக்கியத்துவம் கொடுத்துப் பாராட்டியுள்ளார்.

   

மேலும், அந்த மாணவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்த மு.க.ஸ்டாலின், “உங்களை மாதிரி படிச்சு முன்னேற விரும்புற இளைஞர்களுக்கு நீங்க ஒரு guide-ஆ இருந்து வழிகாட்டுனீங்கனா அதுதான் எனக்கு மகிழ்ச்சி. நீங்க இன்னும் பெரிய உயரங்களை அடையவும் புகழைப் பெறவும் வாழ்த்துகள் தம்பி!” எனத் தெரிவித்துள்ளார். கிராமப்புற பின்னணியில் இருந்து வந்து வெளிநாட்டில் சாதித்த மாணவரின் உழைப்பையும், அதற்கு வழிகாட்டியாக இருக்கச் சொன்ன முன்னாள் முதலமைச்சரின் முதிர்ச்சியான பதிலையும் நெட்டிசன்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் பாராட்டிப் பகிர்ந்து வருகின்றனர்.