சென்னையில் சமூக வலைதளம் வாயிலாகத் தொல்லை கொடுத்த நபரைத் துணை நடிகை ஸ்ரீ அஸ்வினி காவல்துறையில் ஒப்படைத்த சம்பவம் சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது. மணிகண்டன் என்ற உணவக ஊழியர், இன்ஸ்டாகிராமில் நடிகை ஸ்ரீ அஸ்வினிக்குத் தொடர்ச்சியாக ஆபாசமான குறுஞ்செய்திகளை (Obscene messages) அனுப்பி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த நடிகை, அந்த நபரை காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.
பின்னர் அவரை விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இது தொடர்பாகப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே, பொது இடத்தில் மது அருந்தியதைத் தட்டிக்கேட்டதற்காகத் தனக்கு ஆபாச ஆடியோ மற்றும் வீடியோக்களை அனுப்பி மிரட்டிய நபர் குறித்து விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் நடிகை ஸ்ரீ அஸ்வினி ஆதாரங்களுடன் புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. பெண்களுக்கு எதிராகச் சமூக வலைதளங்களில் நடக்கும் இத்தகைய அத்துமீறல்களைத் துணிச்சலாக எதிர்கொண்ட நடிகையின் செயலுக்குப் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
