தமிழ்நாட்டில் கிராமப்புற பெண்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக தமிழ்நாடு அரசு ‘வெற்றி வான்மகள்’ என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இதன் மூலம் விவசாயப் பணிகளுக்காக பெண்களுக்கு இலவச டிரோன் பயிற்சி வழங்குவதோடு, சொந்தமாக டிரோன் வாங்க மானியமும் வழங்கப்பட உள்ளது. வயல்களில் உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை விரைவாகத் தெளிக்கவும், பயிர்களின் வளர்ச்சியைக் கண்காணிக்கவும் இந்த நவீன தொழில்நுட்பம் பெரிதும் உதவும்.
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பயிற்சி நிறுவனம் மூலம் மொத்தம் 500 பேருக்கு டிரோன் இயக்க பயிற்சி அளிக்கப்படவுள்ளது; இதில் 100 பேர் பெண்களாவர். இப்பயிற்சியில் சேர விரும்பும் பெண்கள் 18 முதல் 65 வயதுக்குள் இருக்க வேண்டும் மற்றும் குறைந்தது 10-ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும். 8 நாட்கள் நடைபெறும் இப்பயிற்சியில் டிரோன் இயக்குதல், பராமரித்தல் மற்றும் பாதுகாப்பு முறைகள் கற்றுத்தரப்படுவதுடன், உணவு மற்றும் தங்கும் வசதியும் இலவசமாக வழங்கப்படுகிறது.
பயிற்சி பெற்ற பெண்களில் 50 பேருக்கு டிரோன் வாங்க 50 சதவீதம் வரை மானியம் வழங்க ரூ.2.50 கோடி ஒதுக்கப்பட்டுளளது. மேலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்த சிறு, குறு பெண் விவசாயிகளுக்கு கூடுதலாக 20% மானியம் கிடைக்கும். மானியத்தில் வாங்கும் டிரோனைப் பயன்படுத்தி மற்ற விவசாயிகளின் நிலங்களிலும் சேவை செய்து பெண்கள் வருமானம் ஈட்டலாம்; இருப்பினும், வாங்கிய நாளிலிருந்து 4 ஆண்டுகளுக்கு அதை விற்கவோ மாற்றவோ கூடாது என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.
