மதுரை மாவட்டம் பெருங்குடி அருகே உள்ள வலையபட்டி கிராமத்தைச் சேர்ந்த சின்ன கருப்பு என்பவரின் மகன் அம்சகொடி (38). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த கார்த்திக் ராஜா (26) என்பவருக்கும் இடையே கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஜல்லிக்கட்டு மாடு வாங்கியதில் பணத் தகராறு ஏற்பட்டு, முன்விரோதமாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி மோதிக்கொண்டதால், பெற்றோர் அம்சகொடியை வெளியூருக்கு வேலைக்கு அனுப்பி வைத்தனர். அவ்வப்போது ஊருக்கு வந்து செல்லும் அம்சகொடி, சம்பவத்தன்று வெளியூரிலிருந்து வந்து உறவினர் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
அப்போது, வலையபட்டி கிராம மந்தை அருகே போதையில் இருந்த கார்த்திக் ராஜா, அவரது நண்பர்களான நந்து (21) மற்றும் குருவி மணிகண்டன் ஆகியோர் அம்சகொடியை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். தகராறு முற்றவே, அவர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாள் மற்றும் கத்தியை எடுத்து அம்சகொடியின் தலை மற்றும் முதுகுப் பகுதியில் பயங்கரமாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். அம்சகொடியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து பெருங்குடி காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர்.
தகவலறிந்து வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியதோடு, கொலையாளிகளைப் பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சம்பவ நடந்த 18 மணி நேரத்திற்குள், மண்டேலா நகர் அருகிலுள்ள காட்டுப் பகுதியில் பதுங்கியிருந்த கார்த்திக் ராஜா, நந்து, குருவி மணிகண்டன், விஜய் மற்றும் நாகேந்திரன் ஆகிய 5 பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த கொடூரக் கொலை தற்செயலாக நடந்ததா அல்லது முன்கூட்டியே திட்டம் தீட்டி அரங்கேற்றப்பட்டதா என்ற கோணத்தில் போலீசார் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
