அமெரிக்காவின் ஹவாய் தீவில் அமைந்துள்ள, உலகின் மிகச் சுறுசுறுப்பான எரிமலைகளில் ஒன்றான கி லாவூஆ எரிமலை கடந்த 2018 ஆம் ஆண்டு பயங்கரமாக வெடித்தது. அப்போது எரிமலையிலிருந்து லாவா எனப்படும் உருகிய பாறைக் குழம்பு மிக உக்கிரமாக வெளியேறியது. இந்தத் துயரமான மற்றும் வியப்பூட்டும் இயற்கை நிகழ்வை பிரபல புகைப்படக் கலைஞர் கென் பாயர் தனது கேமராவில் பதிவு செய்திருந்தார். தற்போது அந்தப் பழைய வீடியோ சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகி, இயற்கையின் பேராற்றலை மக்களுக்கு உணர்த்தி வருகிறது.
இந்த வீடியோவில், எரிமலையிலிருந்து வெளியேறும் லாவா குழம்பு பார்ப்பதற்கு ஒரு பெரிய நெருப்பு ஆறு போல செம்மண் மற்றும் ஆரஞ்சு நிறத்தில் பிரம்மாண்டமாக ஓடி வருவதைக் காண முடிகிறது. ஹவாயின் லெிலானி எஸ்டேட்ஸ் பகுதியில் உள்ள ‘பிஷர் 8’ என்ற இடத்தில் இந்த ஆபத்தான நிகழ்வு அரங்கேறியுள்ளது. பொதுவாக எரிமலைக் குழம்பு மெதுவாகவே நகரும் என்று கூறப்படும் நிலையில், இந்த வீடியோவில் உள்ள லாவா தன் பாதையில் குறுக்கே வரும் மரங்கள், நிலங்கள் என அனைத்தையும் நொடிப் பொழுதில் சாம்பலாக்கி விழுங்கியபடி ஆக்ரோஷமாக முன்னேறுகிறது.
https://www.instagram.com/reel/CitnGUcuS_Q/?utm_source=ig_web_button_share_sheet
இந்த எரிமலை வெடிப்பின் போது லாவா குழம்பு மணிக்கு சுமார் 37 கிலோமீட்டர் வேகத்தில் பாய்ந்து சென்றதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஹவாய் தீவு வரலாற்றிலேயே மிக அதிவேகமாகப் பாய்ந்த லாவா நிகழ்வுகளில் இதுவும் ஒன்று என வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த லாவா ஆற்றின் அசாத்திய வேகமும், அதன் பயங்கரமான தோற்றமும் விஞ்ஞானிகளையும், பொதுமக்களையும் ஒருசேர வியப்பிலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.
