மகாராஷ்டிராவின் நந்தனியில் உள்ள ‘ஸ்வஸ்திஸ்ரீ பட்டாரக பட்டாச்சார்ய மகாஸ்வாமி சன்ஸ்தான் மடத்தை’ சேர்ந்த ‘மாதேவி’ என்ற யானை, 409 நாட்களுக்குப் பிறகு மீண்டும் தனது மடத்திற்குத் திரும்பியுள்ளது. குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள வன்தாரா யானைகள் வாழ்வு மையத்தில் இருந்து வனத்துறை, மருத்துவக் குழு மற்றும் வன்தாரா குழுவினர் அடங்கிய 42 பேர் கொண்ட குழுவின் உதவியுடன் மாதேவி பத்திரமாக அழைத்து வரப்பட்டாள்.
வெள்ளிக்கிழமை நள்ளிரவு சுமார் 1:30 மணியளவில் யானை மடத்தை வந்தடைந்தபோது, அதை வரவேற்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர். கினி சுங்கச்சாவடி முதல் நந்தனி காந்தி சௌக் வரை வழிநெடுகிலும் மக்கள் கோலமிட்டும், மலர்களைத் தூவியும் “லாட்கி மாதேவி” எனக் முழக்கமிட்டும் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஓராண்டுக்கும் மேலான காத்திருப்பு முடிவுக்கு வந்ததால், மடத்தின் தலைவர் ஸ்வஸ்திஸ்ரீ பட்டாரக பட்டாச்சார்ய மகாஸ்வாமி உட்படப் பலரும் நெகிழ்ச்சியில் கண்ணீர் விட்டனர்.
https://twitter.com/ivaibhavk/status/2098594891270062384/video/1
மாதேவியின் வருகையின் போது வன்தாரா சி.இ.ஓ விஹான் கராணி, பல்வேறு மடங்களின் மதத் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தைரியஷீல் மானே, சட்டமன்ற உறுப்பினர் ராகுல் அவாடே உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். மட வளாகத்தில் மாதேவி தங்குவதற்காக ‘மாதூரி ரெசிடென்ஸ்’ என்ற தனி இருப்பிடம் மற்றும் சிறப்பு பராமரிப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
