சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள ஷினியுஜாய் தேசிய புவியியல் பூங்காவில், தரைமட்டத்திலிருந்து சுமார் 393 அடி உயரத்தில் செங்குத்தான மலைப்பாறையில் தொங்கும் மரக்கூண்டு போன்ற ஒரு விசித்திரமான மளிகைக் கடை அமைந்துள்ளது. சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் இக்கடை, உலகின் மிகவும் ஆபத்தான மற்றும் அசௌகரியமான கடை என்று அழைக்கப்படுகிறது. மலையேறும் வீரர்களுக்குத் தேவையான தண்ணீர் மற்றும் தின்பண்டங்களை வழங்குவதற்காக வெறும் 2 சதுர மீட்டர் பரப்பளவில் இந்த சிறிய மர கேபின் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தக் கடைக்குச் சென்று பொருட்கள் வாங்குவது அத்தனை எளிதான காரியம் அல்ல; அதற்கு அசாத்திய துணிச்சல் வேண்டும். மலையேறுபவர்கள் கயிறுகள், பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் மெட்டல் கேபிள்களின் உதவியோடு செங்குத்தான பாறையில் ஒன்றரை மணி நேரம் கடினமாகப் பயணித்தே இந்த கடையை அடைய முடியும். மேலும், இந்த சிறிய கடையில் கழிப்பறை வசதி இல்லாததால், அங்கு வேலை செய்யும் ஊழியர்கள் இயற்கை உபாதைகளைத் தவிர்க்கும் பொருட்டு, வேலை நேரத்தில் தண்ணீர் குடிப்பதைத் கூட முற்றிலும் தவிர்த்து விடுகின்றனர்.
https://www.instagram.com/p/DZ2VCdsDPYv/?utm_source=ig_web_button_share_sheet
இங்கு பணியாற்றும் ஊழியர்கள் தினமும் அதிகாலையிலேயே கனமான உணவுப் பொருட்களைத் தங்கள் முதுகில் சுமந்து கொண்டு இந்த செங்குத்தான பாறை மீது ஏறி கடையைத் திறக்கின்றனர். இவ்வளவு கடினமான சூழ்நிலையிலும், இங்கு விற்கப்படும் பொருட்களின் விலை மிகவும் சாதாரணமாகவே உள்ளது. கடையில் ஊழியர்கள் இல்லாத சமயங்களில், மலையேறுபவர்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு, அங்குள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்து ஆன்லைன் மூலம் நேர்மையாகப் பணம் செலுத்திச் செல்லும் ‘நம்பிக்கை’ அடிப்படையிலான சிஸ்டமும் இங்கு செயல்பாட்டில் உள்ளது.
