தெலங்கானாவில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவருக்கு, மனைவி கழிவறை சுத்தம் செய்யும் திரவத்தை உடலில் செலுத்திப் படுகொலை செய்துள்ள கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நிஜாமாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த பிரசாந்த் (35) என்பவர் வளைகுடா நாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருடைய மனைவி சந்தியா (32). பிரசாந்த் ஊரில் இல்லாத நேரத்தில் சந்தியாவிற்கும், அனில் (35) என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இவர்களின் காதலுக்கு பிரசாந்த் தடையாக இருப்பார் என்று கருதிய இருவரும், அவரைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
தங்களின் கொலைத் திட்டத்தை அரங்கேற்ற அவர்கள் வெங்கட சாய் என்பவரின் உதவியை நாடியுள்ளனர். திட்டமிட்டபடி கடந்த ஜூன் 29-ஆம் தேதியன்று வெங்கட சாய், பிரசாந்திற்கு அதிக அளவில் மது குடிக்க வைத்துள்ளார். பின்னர், அவரை வீட்டின் மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்று, சந்தியா தொலைபேசி மூலம் கொடுத்த அறிவுறுத்தலின்படி கீழே தள்ளிவிட்டுள்ளார். இதில் பிரசாந்த் பலத்த காயமடைந்தாரே தவிர, உயிர் பிழைத்துக் கொண்டார். இதனால் பதற்றமடைந்த சந்தியாவும் சாயும், பிரசாந்தை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கும், பின்னர் ஒரு தனியார் மருத்துவமனைக்கும் அழைத்துச் சென்றுவிட்டு, இறுதியில் வீட்டிற்கே கொண்டு வந்துள்ளனர்.
இருப்பினும் பிரசாந்தைக் கொல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த கள்ளக்காதலன் அனிலின் தூண்டுதலின் பேரில், சந்தியா வீட்டில் வைத்து தனது கொடூர முகத்தைக் காட்டியுள்ளார். படுக்கையில் கிடந்த பிரசாந்திற்கு குழாய் (Pipe) வழியாக, கழிவறை சுத்தம் செய்யும் திரவத்தையும் மயக்க மருந்தையும் உடலில் செலுத்தியுள்ளார். அதுமட்டுமன்றி, அவரை கட்டிலில் இருந்தும் கீழே தள்ளிவிட்டுள்ளார். இந்த கொடூரத் தாக்குதலைத் தாங்க முடியாமல் பிரசாந்த் பரிதாபமாக உயிரிழந்தார்.
மறுபுறம், ஜூன் 30-ஆம் தேதி தனது மகன் உயிரிழந்ததை அறிந்த பிரசாந்தின் தாயார், ஜூலை 01 அன்று காவல்துறையில் புகார் அளித்தார். தனது மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மருமகள் சந்தியா மீது அவர் குற்றம் சாட்டினார். இதுகுறித்து காவல்துறை நடத்திய தீவிர விசாரணையிலும், தொழில்நுட்ப ஆதாரங்களின் அடிப்படையிலும் சந்தியாவின் கள்ளத்தொடர்பு மற்றும் கொலைச் சதி அம்பலமானது. விசாரணையில் தங்களின் குற்றத்தை ஒப்புக்கொண்ட சந்தியா, அனில் மற்றும் வெங்கட சாய் ஆகிய மூவரையும் காவல்துறையினர் கைது செய்து, நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைத்தனர்.
