திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் ராமமூர்த்தி தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், கட்சியின் அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் குழுவிலிருந்து அவர் திடீரென நீக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குழுவின் அட்மினான முக்கிய நிர்வாகி செந்தில், வேட்பாளருக்கு ஆதரவாக யாரும் பிரசாரம் செய்ய வேண்டாம் என்றும், பூத் ஏஜெண்டுகள் அவருக்கு ஒத்துழைப்பு அளிக்கக் கூடாது என்றும் தலைமையின் உத்தரவு எனக் கூறி ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த விவகாரம் கட்சித் தொண்டர்களிடையே கடும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேட்பாளர் நீக்கப்பட்ட சர்ச்சை அடங்குவதற்குள், கட்சியின் மாவட்ட இணைச் செயலாளர் ஆனந்த் மற்றும் இளைஞரணி நிர்வாகி ஆண்ட்ரூஸ் ஆகியோர் பேசிக்கொண்ட மற்றொரு ஆடியோ வெளியாகி அதிர வைத்துள்ளது. அந்த உரையாடலில், தேர்தல் நேரத்தில் ஏன் இந்த முரண்பாடு என்று ஒருவர் கேட்க, அதற்குப் பதிலளித்த மற்றொரு நிர்வாகி, “அவர் விலைக்குப் போய்விட்டார் பிரதர்; அன்புமணியிடம் (பாமக தலைவர்) டீலிங் பேசிக்கொண்டிருக்கிறார்” என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். இந்தத் தகவல் தவெக நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
தவெக வேட்பாளர் ராமமூர்த்தி மாற்றுக்கட்சித் தலைவருடன் ரகசியப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக எழுந்துள்ள புகாரால், திருச்சி மேற்கு தொகுதியில் கட்சியின் வெற்றி வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது. சொந்தக் கட்சி நிர்வாகிகளே வேட்பாளருக்கு எதிராகத் திரும்பியுள்ளதும், தேர்தல் பிரசாரத்தை நிறுத்துமாறு தலைமை உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுவதும் அரசியல் வட்டாரத்தில் விவாதப் பொருளாகியுள்ளது. வேட்பாளரின் இந்த ‘டீலிங்’ விவகாரம் சமூக வலைதளங்களிலும் வேகமாகப் பரவி வருகிறது.
