ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டம் சத்ரூவில் உள்ள அரசுப் பள்ளியில், பொறுப்புத் தலைமை ஆசிரியராக இருந்த காலித் உசேன் என்பவர் தனது பள்ளி மாணவியைத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் ஐந்து மாத கர்ப்பிணியான அந்தச் சிறுமிக்கு, ஆசிரியர் தனது சகோதரர் தாரிக் உதவியுடன் சட்டவிரோதமாக மாத்திரைகளைக் கொடுத்துக் கருக்கலைப்பு செய்ய முயன்றுள்ளார். இதன் காரணமாக உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாணவி, மேல்சிகிச்சைக்காக ஜம்மு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்படும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமி கர்ப்பமாக இருந்ததை பிரேதப் பரிசோதனை முடிவுகளும் உறுதி செய்துள்ளன.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து நீதி கோரி அப்பகுதி மக்கள் மாபெரும் போராட்டங்களில் ஈடுபட்டனர். காவல்துறையினர் உடனடியாகச் செயல்பட்டு, ஆசிரியர் மற்றும் அவரது சகோதரரைக் கைது செய்து அவர்கள் மீது போக்சோ உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். குற்றவாளி உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், சட்டவிரோதக் கருக்கலைப்புக்குத் துணைபோன மருந்தக உரிமையாளர் மற்றும் தொடர்புடைய உறவினர்களிடமும் காவல்துறை தனது விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது.
