இந்த அதிர்ச்சி சம்பவம் குஜராத் மாநிலம் ஜாம்நகரைச் சேர்ந்த ஜிக்னேஷ் மாவடியா என்பவருக்கு நடந்துள்ளது. ஜிக்னேஷின் மனைவி பிரித்வி, திருமணத்திற்கு முன்பே நிலேஷ் என்பவரை காதலித்து வந்த நிலையில், திருமணத்திற்குப் பிறகும் அவர்களது கள்ளத்தொடர்பு தொடர்ந்துள்ளது. கணவன் தங்கள் விருப்பத்திற்கு இடையூறாக இருப்பதாகக் கருதிய பிரித்வி, தனது காதலன் நிலேஷுடன் சேர்ந்து மதுவில் சயனைடு கலந்து ஜிக்னேஷைக் கொன்றார்.
கொலை செய்த பிறகு, ஜிக்னேஷின் உடலை ஜாம்நகரில் உள்ள ஒரு தொழிற்சாலை பகுதிக்கு எடுத்துச் சென்று, துண்டு துண்டாக வெட்டி சுமார் 12 அடி ஆழமுள்ள குழியில் புதைத்துள்ளனர். இந்த கொடூர சம்பவத்தை மறைக்க, ஜிக்னேஷிற்கு ஆஸ்திரேலியாவில் நல்ல வேலை கிடைத்து அங்கு தங்கியிருப்பதாக குடும்பத்தினரை பிரித்வி நம்ப வைத்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக எவருக்கும் சந்தேகம் வராத வகையில் “அவர் ஆஸ்திரேலியாவில் இருக்கிறார்” என்று கூறி நாடகமாடி வந்துள்ளார்.
ஆனால், ஆஸ்திரேலியா செல்லவிருந்த உறவினர் ஒருவர் ஜிக்னேஷின் தொடர்பு விவரங்களைக் கேட்டபோது சந்தேகம் எழுந்தது. தொடர்ந்து ஜிக்னேஷின் சகோதரர் அசோக் விசாரித்தபோது, ஆஸ்திரேலியாவில் ஜிக்னேஷ் பெயரில் எந்தப் பதிவும் இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து அசோக் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் பிரித்வி மற்றும் நிலேஷை கைது செய்து தீவிர விசாரணை நடத்தியதில், இருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.
